தமிழகத்தில் பத்து லட்சம் பேர் எழுதியுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 653 கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் ஆயிரத்து 77 ஆகியவற்றுக்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. அதில் 2011-ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இதனிடையே, 831 கூடுதல் காலியிடங்கள் ஏற்பட்டதால் அதுவும் ஜூலையில் அறிவிக்கப்பட்ட தேர்வு அறிவிக்கையில் சேர்க்கப்பட்டது. வி.ஏ.ஓ. தேர்வை தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
வழக்கமாக வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள், தேர்வு நடந்த நாளில் இருந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும். ஆனால், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையே உரிய காலத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடாததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதேபோல, விடைத்தாள்களை திருத்துவதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகே முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யும் பணி முடிவுற்று பதிவெண், வினாத்தாளின் வரிசை எண் போன்றவையும், விண்ணப்பங்களும் சரிபார்க்கப்படும்.விண்ணப்பம், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள சான்றுகளில் குறைகள் இருப்பின் அதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அந்தக் குறைகள் சரிசெய்யப்பட்ட பிறகு, இறுதியாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது, வினாத்தாள்களின் வரிசை எண் ஆகியன சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆனால், விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
தேர்வு முடிவுகள் எப்போது?
இந்தச் சூழ்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 15-க்கு பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகக் கூடும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக