உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 26, 2011

கடலூர் மாவட்டத்தில் கடுமையாகும் மின் வெட்டு: பொதுமக்கள் அவதி

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் மின் வெட்டு கடந்த ஒரு வாரமாக கடுமையாகி வருகிறது. 
 
               கத்திரி வெயில் கடுமையாக உள்ள நிலையில் மின்வெட்டால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னால் 3 மணி நேர மின் வெட்டு, 2 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது கூடுதலாக ஒருமணி நேரம் மின் துண்டிப்பு, அறிவித்தும் அறிவிக்காமலும் இருந்துவந்தது. நகர்ப் புறங்களைவிட கிராமப் புறங்களில் கூடுதல் நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மின் வெட்டு மிகக் கடுமையாக இருக்கிறது. நிரந்தர மின் வெட்டு 3 மணி நேரம் கட்டாயமாக அமல்படுத்தப்படுகிறது. மற்ற நேரங்களில் பகலில் 3 அல்லது 4 முறையாவது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

               ஒவ்வொரு முறையும், 20 நிமிடம் என்று இருந்த மின் துண்டிப்பு, கடந்த 3 நாள்களாக ஒரு மணி நேரமாக அதிகரித்து விட்டது. கத்திரி வெயிலின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதிகப்படியான மின்வெட்டு பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. விவசாயத்துக்கு பகலில் 6 மணி நேரம், இரவு 8 மணி நேரம் வழங்கப்பட வேண்டும். ஆனால் பகலிலும், இரவிலும் தலா 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்றும், அந்த நேரத்திலும் பலமுறை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். 

               கடலூர் மாவட்ட விவசாயம் பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறுகளையே நம்பி இருக்கிறது. தற்போது புதிதாக நடப்பட்ட கரும்புப் பயிர் 10 ஆயிரம் ஏக்கரிலும், நெற்பயிர் 15 ஆயிரம் ஏக்கரிலும் உள்ளன.  மின் பற்றாக் குறையால் இப்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது பெரிதும் சிரமமாக இருப்பதாகவும், கத்திரி வெயிலும் சேர்ந்து கொள்வதால், பயிர்கள் கருகி வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். மின் பற்றாக்குறை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கரும்பு, நெல் பயிரிடும் பரப்பளவு வெகுவாகக் குறைந்து விட்டதாக வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 

மின்வெட்டு குறித்து வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம் கூறுகையில், 

              விவசாயத்துக்கு 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால் 6 மணி நேரம்கூடக் கிடைக்கவில்லை. கோடை வெயிலில் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மட்டும் வெகு ஆழத்தில் சென்றுவிட்ட நிலையில், மின்வெட்டு விவசாயத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. நெல், கரும்பு பயிர்கள் தண்ணீரின்றி வாடுகின்றன. மின்சாரம் எப்போது வரும் எப்போது துண்டிக்கப்படும் என்று தெரிவதில்லை என்றார். 

மாவட்ட விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், 

             விருத்தாசலம்,. திட்டக்குடி தாலுகாக்களில், காலை 6 முதல் 9 மணி வரை விவசாயத்துக்கு மும்முனை வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் காலை 7 மணிக்குள் 4 முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. பல மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதடைந்து கிடக்கின்றன. விவசாயிகள் உதவியுடன் அண்மையில் டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதுபார்க்கப்பட்டு, திறன் அதிகரிக்கப்பட்டது என்றார்.

மின் வெட்டு குறித்து கடலூர் மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 

            மின் பற்றாக்குறை கடுமையாக இருக்கிறது. காற்றாலை மின்சாரம் கிடைப்பதில் தாமதம் ஆகிறது. கடந்த 3 நாள்களாக கடலூர் மாவட்டத்தில் மின் துண்டிப்பு மிக மோசமாக இருக்கிறது. தினமும் 3 மணி நேரம் நிரந்த மின்வெட்டு அமலில் இருக்கிறது. மேற்கொண்டு குறைந்தது 3 முறை, தலா ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதற்கான காரணத்தை மின் வாரிய உயர் அதிகாரிகள் யாரும் தெரிவிப்பது இல்லை. கடலூர் மாவட்டத்தில் பராமரிப்புப் பணிகளும் சரியில்லை. 150 மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதடைந்து கிடக்கின்றன. ஆனால் அவற்றை மாற்றுவதற்கு, புதிய டிரான்ஸ்ஃபார்மர்களை வாரியம் வழங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை என்றார். 


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior