கடலூர் அருகே தாழங்குடாவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள், இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், சட்டப் பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கிராமத்துக்குச் சென்று சமாதானப் பேச்சு நடத்தினர்.÷தாழங்குடாவைச் சேர்ந்த மீனவர்கள் 100 பேர் 20 படகுகளில், செவ்வாய்க்கிழமை, வங்கக் கடலில் வழக்கமாக மீன்பிடிக்கும் பாறைப் பகுதியில் வஞ்சரம் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். காலை 10 மணி அளவில் இந்திய கடற்படையினர் ஒரு கப்பலில் அங்கு வந்தனர். அதில் இருந்து இறங்கி படகுகளுக்கு வந்த சிப்பாய்கள், மீனவர்களை அணுகி அடையாள அட்டை இருக்கிறதா படகுகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா 12 மைல் தூரத்துக்கு அப்பால் ஏன் வந்தீர்கள் என்று கேட்டு மிரட்டி, தடியால் சரமாரியாகத் தாக்கினர். இதில் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் அடைந்தனர். ÷பு தன்கிழமையும் அதே பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் ரூ. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்புள்ள வலைகளை அப்படியே போட்டுவிட்டு கரை திரும்பி உள்ளனர். மீன் வலைகள் கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் மீனவர்கள் மத்தியில் உள்ளது. 3 நாள்களாக தாழங்குடா மீனவர்களுக்கு தொழில் தடைபட்டது. ÷இச்சம்பவம் கடலூர் மாவட்ட மீனவர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வியாழக்கிழமை தாழங்குடாவைச் சேர்ந்த 300 படகுகளில் 250 படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்தியக் கடற்படையின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து சில வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு இருந்தது. கடலூர் நகரில் சுவர்களிலும் பஸ்களிலும் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. மீனவக் கிராமங்கள் ஒன்றுகூடி வியாழக்கிழமை கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு இருந்தனர். ÷இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் ஆகியோர் தாழங்குடா கிராமத்துக்குச் சென்றனர். அங்குள்ள மீனவர்களைச் சந்தித்துப் பேசினர். நடந்த சம்பவத்துக்கு கடற்படை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததாகக் கூறினர். எனினும் மீனவர்கள் சமாதானம் அடையவில்லை. மீனவர்களுக்குக் கடலில் மீன்பிடிக்க எல்லை வகுப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் மீனவர்களுக்கு அடையாள அட்டைகளை அரசுதான் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்திய கடற்படையே எங்களை அன்னியர்கள்போல் தாக்குவதை ஏற்க முடியாது என்றும் கூறினர்.
இப்பிரச்சினை தொடர்பாக அனைத்து மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேசுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து விட்டு கடலூர் திரும்பினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக