கடலூர் :
வடலூர் அருகே நடந்த கொலை வழக்கில் கணவன், மனைவிக்கு கடலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த அரங்கமங்கலம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் தனபால்(37). இவரது மனைவி தனலட்சுமி(46). நாகை மாவட்டம் விழந்தன்மாவடி அடுத்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்த முருகையன்( 60) அடிக்கடி தனலட்சுமி வீட்டிற்கு வந்து சென்றதால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் முருகையனை வீட்டுக்கு வருவதை தனலட்சுமி கண்டித்தார். அவர் அதை கேட்காமல் கடந்த 2008ம் ஆண்டு ஆக.7ம் தேதி தனலட்சுமியை பார்க்க வந்தார். அவருக்கு தனலட்சுமி, தனபால் இருவரும் பிராந்தியில் பூச்சி மருந்து ஊற்றிக்கொடுத்தனர். இதனை குடித்த முருகையன் மரணமடையாததால், சுத்தி மற்றும் சவுக்கு கட்டையால் அடித்து கொலை செய்தனர்.
அன்று இரவு தனபால் நண்பர் வீரபாண்டியன் உதவியுடன், பெரிய கண்ணாடியைச் சேர்ந்த டிரைவர் ராஜா(22) கார் மூலம் முருகையனின் உடலை வேளாங்கண்ணியில் வீசினர். அப்பகுதி வி.ஏ.ஓ., கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் விசாரித்தனர்.சம்பவம் வடலூரில் நடந்ததால் வழக்கு வடலூர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து வடலூர் போலீசார் தனலட்சுமி, தனபால், வீரபாண்டியன், ராஜா ஆகியோரை கைது செய்து கடலூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி, குற்றவாளிகள் தனலட்சுமி, தனபால் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த வீரபாண்டியன், ராஜா இருவருக்கும் மூன்று ஆண்டு சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு வக்கீல் திருமூர்த்தி ஆஜரானார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக