விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் "திட்டக்குடி' சினிமா படத்திற்கு கிராம இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் முன்பு கூடியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் உள்ள சந்தோஷ்குமார் தியேட்டரில் "திட்டக்குடி' என்ற சினிமா படம் நேற்று முன்தினம் முதல் திரையிடப்பட்டு வருகிறது. இந்த படம் விருத்தாசலம் அருகே உள்ள திட்டக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கப்பட்ட படமாகும். இந்த படத்தின் காட்சி ஒன்றில் விருத்தாசலம் அருகே உள்ள கார்மாங்குடி என்ற கிராமத்தின் பெயர் இடம் பெறுகிறது.
ஆபாச காட்சியில் தங்கள் ஊர் பெயர் இடம் பெறுவதாகவும், தங்கள் ஊரை கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி கார்மாங்குடி கிராமத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் தலைமையில் 50 இளைஞர்கள் நேற்று காலை தியேட்டர் முன்பு கூடினர். இதனால் தியேட்டர் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ் பெக்டர் சீராளன் போலீசாருடன் அங்கு சென்று செந்தில்முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இளைஞர்கள் இன்ஸ்பெக்டர் சீராளனிடம் படத்தை திரையிட கூடாது. மீறி திரையிட்டால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வோம் என கூறினர்.பின்னர் படத்தின் தயாரிப்பாளர் செல்வம் கார் மாங்குடி என்ற பெயர் உடனடியாக படத்தில் இருந்து எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதியளித்ததை அடுத்து இளைஞர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக