சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் தேடல் பொறி முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக தமிழ்க் கணிம ஆய்வகம் உருவாக்கிய இந்த தேடல் பொறியை, பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தொடங்கி வைத்தார். இத்துடன் அகராதி டாட் காம் என்ற இணைய தளமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்க் கணிம ஆய்வக ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் கீதா, ரஞ்சனி பார்த்தசாரதி, மதன் கார்க்கி ஆகியோர் வெள்ளிக்கிழமை கூறியது:
கூகுல் போன்ற தேடல் பொறிகள் சொல் சார்ந்த தேடல் பொறிகளாகும். ஆனால், இப்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் கோரி என பெயரிடப்பட்டுள்ள தமிழ் தேடல் பொறி, இணைய பக்கங்களில் உள்ள உரைகளை ஆராய்ந்து அதன் பொருளை மட்டும் தன் சுட்டு வரிசையில் சேமித்துக் கொள்கிறது. உரைகளில் உள்ள பொருள்களையும், அப்பொருள்களிடையே உள்ள உறவையும் அறிவதன் மூலம், தேடும் கோப்புகளை விரைவில் அடைய வழி செய்கிறது. அகராதி டாட் காம் என்ற இணைய தளம் ஒரு இலவச தமிழ் அகராதி ஆகும். இது சொல் பகுப்பான், சொல் உருவாக்கி, பிழை திருத்தம், மாற்றுச் சொற்கள், சொற்களின் இனிமை மதிப்பெண், சொற்களின் பயன்பாட்டு மதிப்பெண், திருக்குறள் பயன்பாடு, பாரதி மற்றும் ஒளவை பாடல்களில் சொற்களின் பயன்பாடு, 15 இலக்க எண்கள் வரை சொற்றொடர்களாக மாற்றுதல் உள்பட 20 சேவைகளை வழங்கும் என்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக