சிதம்பரம் :
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சத்துணவு சாப்பிட்டு வாந்தி எடுத்து மயங்கிய, 110 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தினசரி பள்ளிக்கு வரும் மாணவர்களில், 350 பேர் சத்துணவு சாப்பிடுகின்றனர்.நேற்று காலையில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. மாணவர்கள் கலைச்செல்வன், சிவபாலன் இருவரும் திடீரென வாந்தி எடுத்தனர். அவர்கள் சாப்பாட்டை சோதித்ததில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. மற்ற மாணவர்களும் வாந்தி எடுத்து மயங்கினர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.வாந்தி எடுத்து மயக்கமடைந்த மாணவர்கள் 110 பேரையும், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களில் 103 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மற்ற 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் தாசில்தார் காமராஜ், குமராட்சி பி.டி.ஓ., ஆண்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்களின் சம்பவம் குறித்து விசாரித்தனர். அதனை தொடர்ந்து சத்துணவு பொறுப்பாளர் பள்ளிப்படை அன்பழகன் (55), உதவியாளர்கள் பானுமதி, குப்பம்மாள் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து, குமராட்சி பி.டி.ஓ., உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக