சிதம்பரம்:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. படிப்படியாக மாவட்டம்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெள்ளிவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று மழலையர் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து அவர் பேசியது:
1985-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப் பள்ளியில், 2545 மாணவர்கள் பயிலுகின்றனர். 118 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெற வாய்ப்பை முதல்வர் கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார். தமிழகத்தில் இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வருவதால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில்தான் ஆண்டுக்கு 2500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலுகின்றனர்.
சிதம்பரம் நகரத்தை மேம்படுத்தவதற்காக நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திட்டங்களை நிறைவேற்ற 2.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் 1-ம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை இலவசமாக பயில முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் பயிலும் மோகம் குறைந்துவிட்டது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மூத்தத் திமுக தலைவர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி பெயரில் 25ஆயிரத்துக்கு அறக்கட்டளையை, அண்ணாமலைப் பல்கலை. இணைப்பேராசிரியர் வெங்கடேசன் நிறுவியுள்ளதாகவும், இந்த அறக்கட்டளை மூலம் பள்ளியில் ஆண்டுதோறும் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்தார்.
விழாவில் கீரப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் வாழ்த்துரையாற்றினார். முதல்வர் ஜி.சக்தி நன்றி கூறினார். துணைச் செயலர் எஸ். கஸ்தூரி, வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எஸ்.குமார், அண்ணாமலைப் பல்கலை. மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம், குமராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இரா.மாமல்லன், காமராஜ் சிறப்பு பள்ளி முதல்வர் மீனாட்சி, துணைமுதல்வர் ஜி.ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக