உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 13, 2010

தமிழகத்தில் 40ஆயிரம் கோடியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் 2 ஆண்டுகளில் தேவைக்கும் கூடுதலாக மின்உற்பத்தி



சிதம்பரத்தில் குண்டு பல்புக்கு பதிலாக சிறுகுழல் விளக்குகள் வழங்கும் முன்னோடி திட்டத்தை குத்து விளக்கேற்றி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார் அமைச்சர்

சிதம்பரம்:

                 தமிழகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் தேவைக்கும் கூடுதலாக 8 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

                      தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிதம்பரத்தில், குண்டு பல்புக்கு பதிலாக அதே விலையில் சிறுகுழல் விளக்குகள் வழங்கும் முன்னோடித் திட்ட தொடக்கவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குத்துவிளக்கேற்றி திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியது:

                   தமிழகத்தில் முதன்முதலாக கடலூர் மாவட்டத்தில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தில்லி சென்று அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது 4 முறை மின்வெட்டு ஏற்பட்டது. ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 5 மணி முதல் 10 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. தமிழகத்தில் மட்டும்தான் 2 மணி நேரம் மின்வெட்டு. கருணாநிதி ஐந்தாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. 

                      இப்போது மக்கள் அதிக அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.÷இப்போது நமக்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. 8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் பல கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டு தமிழகத்தில் மின்வெட்டு சமாளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் கருணாநிதியின் முயற்சியால்  |40 ஆயிரம் கோடியில் தூத்துக்குடி, கடலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்உற்பத்தி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

                  இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் தமிழகத்தில் தேவைக்கும் கூடுதலாக  மின்உற்பத்தி செய்யப்படும். வரும் 2 ஆண்டுகளில் மின்வெட்டே இருக்காது. நாம் மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரத்தை அளிக்க முடியும். குண்டு பல்புக்கு பதிலாக சிறுகுழல் விளக்குகள் பொருத்துவதன் மூலம் ஓராண்டுக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். 

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் சி.பி.சிங் தலைமை வகித்துப் பேசியது: 

                    தமிழகத்தில் 1 கோடியே 40 லட்சம் நுகர்வோர் வீடுகளில் குண்டுபல்பு மாற்றப்பட்டு சிறுகுழல் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிச்சம் அதிகரிப்பு, மின் கட்டணம் சேமிப்பு உள்ளிட்ட 2 பலன்கள் கிடைக்கிறன. இப்போது மின்திருட்டு, மின்கசிவு உள்ளிட்டவைகளில் 18 முதல் 19 சதவீதம் வரை மின் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க தமிழகத்தில் முதல்கட்டமாக  110 பெருநகரங்கள் தேர்வு செய்யப்பட்டு |400 கோடி செலவில்  மின்இழப்பை தடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. 

                  இரண்டாவது கட்டமாக 2 ஆயிரம் கோடி செலவில் மின்கம்பிகள் மாற்றுவது, புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மூலம் மின் இழப்பு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே இன்னும் 2 ஆண்டுகளில் மின்இழப்பீடு 3 முதல் 4 சதவீதமாகக் குறைந்துவிடுமென சி.பி.சிங் தெரிவித்தார்.  மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் முன்னிலை வகித்துப் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 67 ஆயிரத்து 56 வீடுகளில் முதல்கட்டமாக 2 லட்சம் வீடுகளில் குண்டுபல்புகளை மாற்றி சிறுகுழல் விளக்கு பொருத்தப்படவுள்ளது என்றார்.

                          மின்சார வாரிய ஆராய்ச்சி மேம்பாட்டு திட்ட தலைமைப் பொறியாளர் சி.பி.பெர்லி,  சில்வர் ஃபர் நிறுவனம் துணைத் தலைவர் ஜெயின் ஆகியோர் திட்டத்தை விளக்கிப் பேசினர். துரை.ரவிக்குமார் எம்.எல்.ஏ. நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் இரா.மாமல்லன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். கடலூர் மேற்பார்வை பொறியாளர் எஸ்.எம்.ரவிராம் நன்றி கூறினார். விழாவில் கோட்டாட்சியர் அ.ராமராஜூ, வட்டாட்சியர் எம்.காமராஜ், சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் இரா.செல்வசேகர், நகரமன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ்விஜயராகவன், அப்புசந்திரசேகரன், பி.மணி உள்ளிட்ட பங்கேற்றனர்.முன்னதாக விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு மின்சார வாரிய தலைமைப் பொறியாளர் கே.வேணுகோபால் வரவேற்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior