உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 13, 2010

விதை நெல் பிற மாநிலங்களை நம்பி இருக்கும் தமிழகம்


தமிழகத்தில் விவசாயிகள் அதிகம் பயிரிடும் பிபிடி, பொன்னி விதைநெல் ரகங்கள் பெருமளவுக்கு ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்துதான் விற்பனைக்கு வருகின்றன.
 
கடலூர்: 

                   தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 325 லட்சம் ஏக்கரில் சாகுபடிப் பரப்பளவு 138 லட்சம் ஏக்கர். இதில் 44.75 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 34.40 லட்சம் ஏக்கரில் சம்பா நெல், ஏனைய இரு குறுகிய கால பருவங்களில் 10.35  லட்சம் ஏக்கரில் குறுகியகால நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறன.சம்பா பருவத்தில் ஏக்கருக்கு 30 கிலோவும், குறுவை பருவத்தில் ஏக்கருக்கு 40 கிலோவும் விதை நெல் தேவை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 

                     ஆனால் வேளாண் துறை சம்பா பருவத்துக்கு 24 கிலோவும், குறுவைப் பருவத்துக்கு 16 கிலோவும் விதை நெல் போதும், செம்மை நெல் சாகுபடி முறையில் மிகக் குறைந்த நெல் விதையே போதும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள்.எனவே சராசரியாக ஏக்கருக்கு 30 கிலோ வீதம் கணக்கிட்டால் ஆண்டுக்கு 44.75 லட்சம் ஏக்கருக்கு 1.34 லட்சம் டன் விதை நெல் தேவைப்படும். விவசாயிகளின் விதை நெல் தேவையில் 17 சதவீதத்தை, வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக வேளாண் துறை வழங்க வேண்டும் என்பது தமிழக அரசின் விதைக் கொள்கை.17 சதவீதம் நெல் விதையை வேளாண் துறை, அரசு விதைப் பண்ணைகள் மூலமாகவும், அனுமதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்தும் விநியோகிக்கின்றன. 
 
                    தமிழகத்தில் அனைத்துப் பயிர்களுக்கும் கடலூர் வண்டுராயன்பட்டு, மிராளூர் உள்ளிட்ட 37 அரசு விதை உற்பத்தி பண்ணைகள் உள்ளன.இவைகள் தாங்களே பயிரிட்டு கிடைக்கும் விதை நெல் மூலமாகவும், அனுமதி பெற்ற விவசாயிகளிடம் கொள்முதல் செய்தும், வேளாண் துறைக்கு வழங்குகின்றன.பல ஆண்டுகளில் இது முடியாமல்போய், ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் உள்ள தேசிய விதைக் கழகத்திடம் கொள்முதல் செய்தும் வழங்குகிறது. மொத்தத் தேவையில் 17 சதவீதத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, தேவையான விதை நெல் கையிருப்பில் உள்ளது என்று வேளாண் துறை அறிக்கை வெளியிடுகிறது.

                 மேற்கொண்டு தேவைப்படும் விதை நெல் முழுவதும், கூட்டுறவுச் சங்கங்கள் (மிகக்குறைந்த அளவில்) தனியார் விதை நெல் விற்பனை நிலையங்கள், பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தும், விவசாயிகள் வைத்து இருக்கும் விதை நெல் மூலமாகவும் பயன்படுத்தப்படுகிறது. 60 சதவீதம் விதை நெல் ஆந்திரம், கர்நாடகம் போன்ற பிறமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வருகின்றன.ஆனால் இவற்றின் தரம் கேள்விக்குறியாக உள்ளன என்கிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவரும் விதைநெல் உற்பத்தி விவசாயியுமான விஜயகுமார் கூறுகையில், 

                   "தமிழக விதை நெல் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவிலேயே தரமான விதைகளை உற்பத்தி செய்கிறது. விதை நெல்லை பதப்படுத்தும் அரசு விவசாயப் பண்ணைகளின் உற்பத்தித் திறன் போதுமானதாக இல்லை. ஒரு கிலோ விதைநெல்லுக்கு நமது அரசு, பிபிடி ரகத்துக்கு  18-24}ம், பொன்னி ரகத்துக்கு  16-55}ம் வழங்குகிறது.ஆனால் வேளாண்துறை தேசிய விதைக் கழகத்திடம் கொள்முதல் செய்யும் விதை நெல்லுக்கு, கிலோ  28 வரை விலை கொடுக்கிறது. ஆனால் நமது விவசாயிகளுக்கு கிலோவுக்கு  25 விலை கொடுங்கள் என்று 10 ஆண்டுகளாக கேட்கிறோம், ஆனால் பதில் இல்லை.விதை நெல்லுக்கு விலை குறைவாக வழங்குவதால், விதைநெல் பயிரிடும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது' என்றார். தமிழகத்தில் விவசாயிகள் அதிகம் பயிரிடும் பிபிடி, பொன்னி விதைநெல் ரகங்கள் பெருமளவுக்கு ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்துதான் விற்பனைக்கு வருகின்றன. இந்த விதைநெல்லில் பல நேரங்களில் கலப்படம் நேர்ந்து விடுகிறது.கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட பிபிடி ரகம் நெல்லில் கலப்படம் இருந்ததால், 15 ஆயிரம் ஏக்கரில் மகசூல் பாதிக்கப்பட்டதாக மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

                      தமிழகத்தில் விதை நெல்லைச் சேமிக்க இடவசதி இல்லை. செலவு அதிகம் ஆகிறது. விதை நெல்லை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் அரசு பணம் வழங்குவதில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வரும் விதைநெல் தரம் கேள்விக்குறியாக உள்ளது. விதை நெல் உற்பத்திக்கு கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் அரசு அதிக சலுகைகள் அளிக்கின்றன. நமக்குத் தேவையான விதை நெல்லை தமிழகத்திலேயே உற்பத்தி செய்தால்தான், தமிழகத்தில் நெல் உற்பத்தியை பஞ்சாப், ஹரியாணா போன்று உயர்த்த முடியும் என்றும் ரவீந்திரன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior