கடலூர்:
திட்டக்குடி துணை மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, கடந்த 3 மாதமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாததால் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ÷திட்டக்குடி துணை மின் நிலையத்தில் 3 மாதங்களுக்கு முன், பிரேக்கர் சேதமடைந்தது. அதைத் தொடர்ந்து மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் இருந்து, பேக் ஃபீடிங் முறையில் திட்டக்குடி பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
திட்டக்குடி துணை மின் நிலையத்தில் பிரேக்கர் பழுதடைவதும் அதனை சீரமைப்பதும் அது மீண்டும் பழுதடைவதும் வழக்கமாக உள்ளது. இதனால் திட்டக்குடி தாலுகா பகுதிகளில் மின் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. திட்டக்குடி தாலுகாவில் இப்போது 8 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடிப் பணிகள் நடந்து வருகின்றன. 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது. மின் விநியோக பாதிப்பால் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நீர்ப்பாசனம் செய்வதில், பெரும் பிரச்னை இருந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ÷குறைந்த மின் அழுத்தம் காரணமாக விவசாய பம்புசெட் மோட்டார்கள் இயங்குவதில் சிரமம் இருப்பதாகவும், வீடுகளில் குழல் விளக்குகள் கூட எரிவது இல்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் விருத்தகிரி கூறுகையில்,
திட்டக்குடி துணைமின் நிலையத்தில் பிரேக்கர் பழுதடைந்து 3 மாதமாகிவிட்டது. அது இன்னமும் மாற்றப்படவில்லை. மின் வாரிய அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். எனினும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மோட்டார்கள் இயங்கவில்லை. திட்டக்குடி வட்டத்தில் போதுமான மழையும் இல்லை. இதனால் கரும்புப் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சம்பா நடவுப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.
திட்டக்குடி மின்வாரிய உதவிக் கோட்டபொறியாளர் கிருஷ்ணன் கூறுகையில்,
திட்டக்குடி துணை மின்நிலையத்தில் சேதமடைந்துள்ள பிரேக்கரை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மின் விநியோகம் பாதிக்காமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்து வருகிறோம். தொழார் ஃபீடரில் இருந்தும், பெண்ணாடம் துணை மின் நிலையத்தில் இருந்தும் மின்சாரம் வழங்குகிறோம். எனினும் குறைந்த மின் அழுத்தம் இருப்பதாக விவசாயிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். வேறு ஃபீடரில் இருந்து மின் இணைப்பு வழங்க, மின் கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை சீரடையும். அதே நேரத்தில் திட்டக்குடி துணைமின் நிலையத்தில் பழுதடைந்த பிரேக்கரை மாற்றுவதற்கும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கிறோம். தொழுதூரில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அப்பணி முடிந்ததும் திட்டக்குடி தாலுகாவில் மின் விநியோகத்தில் உள்ள பிரச்னைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்படும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக