கடலூரை அடுத்த வழிசோதனைபாளையத்தில் சனிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்த வாழை மரங்கள்.
கடலூர்:
: கடலூரில் சனிக்கிழமை இரவு சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வாழை மரங்கள் சேதம் அடைந்தன; மின் கம்பங்கள் சாய்ந்தன. இரவில் மின் விநியோகம் தடைபட்டது. கடந்த 2 மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை இரவும் கனமழை பெய்தது. இரவு 10 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
இரவு 12 மணி வரை சூறைக்காற்று, இடி மின்னலுடன் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது.இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சூறாவளிக் காற்று காரணமாக ராமாபுரம், புதூர், வழிசோதனைபாளையம், சாத்தங்குப்பம், காட்டுப்பாளை, ஒதியடிக்குப்பம், கொடுக்கம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்தன. மொத்தம் 50 ஏக்கரில் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்திருப்பதாக ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசேகரன் தெரிவித்தார்.
நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம் பகுதிகளில் 50 ஏக்கரில் கரும்பு பயிர் சாய்ந்து விட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். கடலூர் வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன.இதனால் அப்பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. நகரில் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் மழைநீர் தேங்கி மீண்டும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மழை, சம்பா நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக