கடலூர்:
திட்டக்குடி வட்டத்தில் உள்ள வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்புப் பணிகள் நிறைவுற்றதால், இந்த ஆண்டு 23 அடி உயரத்துக்குத் தண்ணீர் பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.÷தமிழகத்தில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று வெலிங்டன் ஏரி (படம்). 1918-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் வெங்கனூர் ஓடையின் குறுக்கே இந்த ஏரி உருவாக்கப்பட்டது.÷திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களில் 64 கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வெலிங்டன் ஏரி மூலம் பாசன வசதி பெறுகின்றன. ஏரிக்கு பிரதானமாக வெள்ளாற்றில் இருந்தும், சிறு சிறு ஓடைகள் மூலமாகவும் தண்ணீர் கிடைக்கிறது.
இந்த ஏரியின் கரை 300 மீட்டர் நீளம், பூமிக்குள் தொடர்ந்து அழுந்திக் கொண்டு இருந்ததால், கரை பலவீனமடைந்து வந்தது. ஏற்கெனவே 8 கோடிக்கு மேல் செலவிட்டும், ஏரிக்கரை பூமிக்குள் அழுந்துவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்தது. இதனால் ஏரியில் 21 அடிக்கு மேல் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மங்களூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகையின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் கருணாநிதி வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்புக்கு 20 கோடி ஒதுக்கினார்.÷கரை சீரமைப்புப் பணிகளை முன்னிட்டு கடந்த ஆண்டு ஏரியில் தண்ணீர் பிடிக்கவில்லை. கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த கரை சீரமைப்புப் பணிகள், 98 சதவீதம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
30 அடி உயரத்துக்குத் தண்ணீர் பிடிக்கும் வகையில் கரை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று உள்ளன. இன்னும் சில பணிகள் பாக்கி உள்ளன. அவற்றை முடிக்க அரசிடம் நிதி எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த ஆண்டு ஏரியில் 23 அடி உயரத்துக்கும், அடுத்த ஆண்டு 26 அடி உயரத்துக்கும், அதற்கடுத்த ஆண்டு முழுக் கொள்ளளவான 30 அடி உயரத்துக்குத் தண்ணீர் பிடிக்கவும் பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது. ஏரிக்கரை சீரமைப்புப் பணிகளை தமிழக பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் அன்பழகன் புதன்கிழமை பார்வையிட்டு திருப்தி தெரிவித்தார். 98 சதவீதம் பணிகள் முடிந்து விட்டதாக அவர் கூறினார்.
பாக்கி இருக்கும் சில பணிகளையும் விரைந்து முடிப்பதாக அவர் உறுதி அளித்தார். வெலிங்டன் ஏரியில் 30-க்கும் மேற்பட்ட மதகுகளும், ஷட்டர்களும் உள்ளன. அவற்றைப் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.÷வரும் மழை காலத்துக்குள் இப்பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏரியின் பாசன வாய்க்கால்களும் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன என்றும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் கொத்தட்டை ஆறுமுகம் கூறுகையில்,
"வெலிங்டன் ஏரிப் பாசன வாய்க்கால்கள் அனைத்தும் தூர்ந்து கிடக்கின்றன. அவற்றையும் சீரமைக்க வேண்டும்.÷வெள்ளாற்றின் மூலம் தண்ணீர் வசதி பெறும் வெலிங்டன் ஏரி, பல ஆண்டுகளில் வறண்டு கிடக்கிறது. இதற்கு நிரந்தர தண்ணீர் வசதி கிடைத்தால், வறண்டு கிடக்கும் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களின் பாசனத் தேவையும், குடிநீர் தேவையும் பூர்த்தி ஆகும்.
முசிறி அருகே கட்டளை உயர்நிலை வாய்க்காலில் இருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. அந்த வாய்க்கால் வெலிங்டன் ஏரிக்கு அருகில் செல்ல இருந்ததால், வெலிங்டன் ஏரிக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இருந்தது. பின்னர் அது கைவிடப்பட்டு, வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே நாமக்கல் அருகே உள்ள ஜேடர்பாளையம் அணையில் இருந்து, 50 கி.மீ. நீளத்துக்கு கால்வாய் வெட்டி, வெள்ளாற்றுடன் இணைத்து விட்டால், வெலிங்டன் ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்க வாய்ப்பு ஏற்படுவதுடன், ஆத்தூர், சின்னசேலம், திட்டக்குடி விருத்தாசலம், சிதம்பரம் தாலுகாக்களும் பயன்பெறும் என்றார் ஆறுமுகம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக