கடலூர்:
மேட்டூர் அணையிலிருந்து போதுமான நீர் திறந்து விடப்படாததால், கடலூர் மாவட்டத்தில் டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடி தாமதம் ஆகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு 1.54 லட்சம் ஏக்கர் நிலத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. ஜூலை 28-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதிலும் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கல்லணை ஆகஸ்ட் 1-ம் தேதி திறக்கப்பட்டது. கடலூர் மாவட்ட பாசனத்துக்காக கொள்ளிடம் கீழணைக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் பெரும்பகுதி வடவாறு வழியாக வீராணம் ஏரிக்குத் திறந்து விடப்பட்டது.
இதன் மூலம் சென்னைக்கு குடிநீருக்கு ஏற்றுவது பாதிக்கப்படாமல் இருந்தது. எனினும் பாசனத்துக்கு போதிய தண்ணீர் திறக்கப்படவில்லை. செப்டம்பர் 11-ம் தேதி வீராணம் ஏரி பாசனத்துக்குத் திறக்கப்பட்டது. வீராணம் முழு அளவுக்கு நிரம்பாத நிலையில், அதன் பாசன வாய்க்கால்களுக்குப் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடும் நீரின் அளவு, வெள்ளிக்கிழமை 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கல்லணைக்கு 12,837 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கடலூர், நாகை மாவட்ட சம்பா பாசனத்துக்காக கொள்ளிடம் கீழணைக்கு 1200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து நாகை மாவட்ட டெல்டா பாசனத்துக்கு தெற்கு ராஜன் வாய்க்காலில் 323 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டப் பாசனத்துக்கு வடவாறில் 800 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்காலில் 178 கனஅடி வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. வடவாறில் இருந்து வீராணம் ஏரிக்கு 600 கன அடி நீர் வழங்கப்படுகிறது. இதில் 73 கன அடி நீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்படுகிறது. 350 கன அடி நீர் வீராணத்தின் 28 வாய்க்கால்களிலும் திறக்கப்பட்டு உள்ளது. வேளாண் பணிகளுக்கு இது போதுமானதாக இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.
மேட்டூர் அணை பாசனத்துக்கு ஜூலை 28-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டும், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான டெல்டா பாசனப் பகுதிகளில் இன்னமும் சம்பா சாகுபடிப் பணிகள் தொடங்கவில்லை என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள். இதே அளவு தண்ணீரே தொடர்ந்து திறந்து விடப்பட்டால், சம்பா நாற்றுவிடும் பணிகள் அக்டோபர் முதல் வாரத்துக்குக் தள்ளப்பட்டு, நடவுப் பணிகள் நவம்பர் முதல் வாரத்துக்குச் செல்லும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கிறார்கள். இதனால் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பாதிப்பைச் சந்திக்கும் நிலையும், சம்பா அறுவடைக்குப்பின் உளுந்து சாகுபடியும் கேள்விக்குறியாகும் என்றும் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
மேட்டூர் அணை ஜூலை 28-ல் திறந்தும், போதுமான அளவுக்குத் தண்ணீர் விடப்படாததால், கடலூர் மாவட்ட காவிரி கடைமடைப் பகுதிகளை காவிரி நீர் இன்னமும் எட்டிப்பார்க்கவில்லை. வீராணத்தில் திறக்கப்பட்ட நீர் வயல்களுக்குள் ஏறிப்பாயவில்லை. இதனால் புளியங்குடி, எய்யலூர், மோவூர், முட்டம் பகுதிகளில் வாய்க்கால் நீரை ஏற்றம் அமைத்து நாற்றங்கால் பணிகளைச் செய்து வருகிறார்கள். சுமார் 1000 ஆயிரம் ஏக்கரில் சம்பா நாற்றங்கால் தயார் செயப்பட்டு இருக்கிறது. பல பகுதிகளில் நாற்றங்கால் பணிகளே இன்னமும் தொடங்கப்படவில்லை.
இதேநிலை நீடித்தால் பெரும்பாலான பகுதிகளில் நாற்றங்கால் பணிகள் அக்டோபர் முதல் வாரத்தில்தான் தொடங்கும். நடவுப்பணிகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கி டிசம்பரில்தான் முடிவடையும். இதனால் அறுவடை பின்னுக்குத் தள்ளப்படும். கடைமடைப்பகுதிகள் தண்ணீர் பற்றாக் குறையையும் சந்திக்க நேரிடும். சம்பா அறுவடைக்குப்பின் உளுந்து சாகுபடியும் இந்த ஆண்டு செய்ய முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். எனவே கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்குக் கூடுதலாக 1000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக