உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 13, 2010

கடலூரில் பேனருக்கு கட்டுப்பாடு சாரத்துக்கு இல்லையா?


 
கடலூர்:  
 
                 டிஜிட்டல் பேனர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், பேனர்களைக் கட்டுவதற்கான கழிகளால் அமைக்கப்படும் சாரத்துக்கு இல்லையா? என்ற கேள்வி கடலூரில் எழுந்துள்ளது. மேலும் போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறிய செயலாகவே, பேனர் பிரச்னை உருவெடுத்து இருக்கிறது.
 
                   அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் விழாக்கள், திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு, சாலை நெடுகிலும் பெரும் பொருள் செலவில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது, நகரங்களில் புதிய கலாசாரமாக மாறி வருகிறது.ஏற்கெனவே தமிழகம் முழுவதும் மிகப் பெரிய விளம்பர பேனர்கள் வைத்ததால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, நீதிமன்றத்தில் முறையிட்டபோது, அந்த விளம்பரங்களுக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்து, கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.ஆனால் அந்த விளம்பரங்களையும் மிஞ்சும் வகையில் பன்மடங்கு பிரமாண்டமான  டிஜிட்டல் பேனர்களை அரசியில் கட்சிகளைச் சேர்ந்தோர், சாலை நெடுகிலும் வைக்கத் தொடங்கி இருப்பது, நகரங்களில் பெரும் போக்குவரத்துப் பிரச்னைகளைத் தோற்றுவித்து வருகிறது.நிகழ்ச்சிக்கு, 2 நாள்களுக்கு முன்பு வைத்து, நிகழ்ச்சி முடிந்த மறுநாள் அகற்றிவிட வேண்டும் என்று பேனர்களுக்குக் கட்டுப்பாடு உள்ளது. 
 
                    இந்தக் கட்டுப்பாடுகள் மீறப்படுவது குறித்து அண்மையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோபம் அடைந்து, உரிய நேரத்தில் பேனர்களை அகற்றிவிடுமாறு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் கடலூரில் டிஜிட்டல் பேனர்களுக்காக சவுக்குக் கழிகளால் கட்டப்பட்ட சாரம், பேனர்கள் அகற்றப்பட்ட பிறகும் கடந்த 15 நாள்களாகப் பிரிக்கப்படாமலும் அகற்றப் படாமலும் இருப்பது, தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். டிஜிட்டல் பேனர்களை வைத்த அரசியல் கட்சியினர், ஏனைய பிரமுகர்கள் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, மறுநாளே அகற்றிவிட்டனர். ஆனால் சாரம் கட்டியவர்கள் இன்னமும் அகற்றாமல் இருப்பது, அவர்களுக்கு என்று தனியாக விதிகள் ஏதும் உள்ளனவோ என்ற ஐயத்தைப் பொதுமக்கள் மனதில் தோற்றுவித்துள்ளது. 
 
                 பஸ் நிறுத்தங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை மறைத்தும் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தும், பல இடங்களில் குழித் தோண்டியும் கட்டப்பட்டு இருக்கும் இந்தச் சாரங்களால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.இன்னொரு நிகழ்ச்சிக்கு, பேனர் வைக்க யாராவது வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் சாரத்தைக் கட்டியவர்கள் விட்டு வைத்து இருக்கிறார்களோ என்ற ஐயமும் எழுகிறது.இது குறித்து கடலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கேட்டற்கு, "பேனர்களையும் சாரங்களையும் உடனே அகற்றிவிடுமாறு கூறிவிட்டோம். எனினும் அவர்கள் ஏன் அகற்றாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை' என்று வியப்பு தெரிவித்தனர்.நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையே கைவிரித்தால், யார்தான் நடவடிக்கை எடுப்பது என்று கேள்வி எழுப்புகிறார்கள் விவரம் அறிந்த பொதுமக்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior