பண்ருட்டி :
பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி கட்டுமானப் பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் ஊராட்சி சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 20 ஏக்கர் பரப்பளவில் திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் கல்லூரி கட்டடம் கட்ட 17 கோடியே 8 லட்சத்து 61 ஆயிரத்து 979 ரூபாய் மதிப்பீட்டில் கடந்த மாதம் துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதற்கான கட்டுமானப் பணி துவக்க விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார்.
பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில்,
"பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரியில் தனியார் கல்லூரிக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இப்பணிகள் 15 மாதங்களில் முடிக்கப்படும். இங்கு சிவில், மெக்கானிக் பிரிவுகள் தமிழ் வழியில் கற்பதற்காக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 385 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 108 வசதி மூலம் 6 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரம் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. பிசியோதெரபிசிஸ்ட் 600 பணியிடங்கள் ஒரு வாரத்தில் நிரப்பப்படும். வரும் கல்வியாண்டில் பண்ருட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி கொண்டு வரப்படும்' என கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, டி.ஆர்.ஓ., நடராஜன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தேவதாஸ் மனோகரன், டீன் குமாரசாமி, நகராட்சி சேர்மன் பச்சையப்பன், பொதுப்பணித் துறை தொழில் நுட்பம் (கல்வித்துறை) தஞ்சாவூர் செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி செயற் பொறியாளர் பாபு, துயர்துடைப்பு தாசில்தார் மங்களம், உதவி பொறியாளர் கனகராஜ், தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மேலிருப்பு தனபதி, இளைஞரணி தணிகைசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக