உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 16, 2010

அனைத்து ஊராட்சிகளிலும் மகளிர் எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்படுமா?


                            தமிழகத்தில் இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் எழுத்தறிவுத் திட்டத்தை, ஒவ்வொரு ஒன்றியத்திலும் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்த வேண்டும். பணியாளர்களுக்கான மாத தொகுப்பூதியத்தை ரூ.400-லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என இதில் பணியாற்றும் வளர் கல்வித் திட்டப் பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் சேலம், தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 50 சதத்துக்கும் குறைவாக உள்ளது. 
 
                  இதை உயர்த்தும் நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில், பகுதி நேரப் பணியாக படிக்கும் பாரதம் என்ற எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தில் அறிவொளி, வளர் கல்வித் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளித்து, மாதம் ரூ.2,000 வரை ஊதியம் வழங்க மத்திய அரசு வரையறை செய்துள்ளது. எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கற்றுக்கொடுப்பதே இவர்களின் பணியாகும். இந்த நிலையில், மற்ற 27 மாவட்டங்களில் உள்ள பணியாளர்கள், ஏற்கெனவே உள்ள அறிவொளி வளர் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் சங்கம் திருச்சி என்ற அமைப்பைத் தொடங்கி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
 
                       அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் இந்தப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரி, உண்ணாவிரதம், கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.தமிழகத்தில் படிக்கும் பாரதம் திட்டம் செயல்படுத்தப்பட்ட 5 மாவட்டங்களைத் தவிர, மற்ற 25 மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 80 மாவட்ட அலுவலகப் பணியாளர்கள், 337 வட்டாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 1,274 முதன்மை வளர் கல்விப் பணியாளர்கள், 1,055 உதவி முதன்மை வளர் கல்விப் பணியாளர்கள், 10,592 ஊராட்சி வளர் கல்விப் பணியாளர்கள், 9,621 ஊராட்சி உதவி வளர் கல்விப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 22,900 பணியாளர்கள் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.இவர்களில் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 7,105 பேரும், பிளஸ் 2 வரை படித்தவர்கள் 11,023 பேரும், பட்டப் படிப்பு முடித்தவர்கள் 3,716 பேரும், பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் 877 பேரும், பட்டதாரி ஆசிரியர் படிப்பை முடித்தவர்கள் 263 பேரும் உள்ளனர்.
 
                
              தமிழகத்தில் 1.07.2010-ல் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், மாநில பெண்கள் எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்படும் என்றும், இதில் வளர் கல்விப் பணியாளர்களை 6.9.2010 முதல் 5.3.2011 வரை உள்ள 6 மாத காலம் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வது என்றும் திட்டம் வரையறை செய்யப்பட்டது.இந்தத் திட்டத்தை  25 மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு செயல்படுத்த தமிழக அரசு சுமார் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழகத்தில் வளர் கல்வித் திட்டத்தில் பணியாற்றுவோர் சுமார் 22,900 பேர் உள்ள நிலையில், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை வளர் கல்விப் பணியாளர்கள் என சுமார் 1,200 பேருக்கு மட்டுமே இந்தத் திட்டத்தில் பணி நியமனம் கிடைத்துள்ளது.இந்தப் பணியாளர்களில் 25 மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதத் தொகுப்பூதியமாக ரூ.4000, வட்டாரத் திட்ட, முதன்மை வளர் கல்விப் பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.400-ம் ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்துக்கு வழங்கப்படவுள்ளது. மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மூலமாக கடந்த வாரத்தில் இவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். 
 
                           ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சிகளில் பணியாற்றும் வளர் கல்விப் பணியாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் குறித்து எதுவும் கூறப்படவில்லை.ஓர் ஒன்றியத்தில் சராசரியாக 4 எழுத்தறிவு மையங்களை மட்டுமே செயல்படுத்தினால், மற்ற பணியாளர்கள் மற்றும் கற்போரின் நிலை கேள்விக்குரியதாகும். இந்த நிலையில், நியமனம் செய்யப்பட்ட வட்டார மற்றும் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதம் ரூ.400 தொகுப்பூதியமாக வரையறை செய்தது நியாயம்தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.கூலித் தொழிலாளர்களே நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.100 ஊதியமாகப் பெறும் போது, இந்தத் திட்டத்தில் பகுதி நேரமாகப் பணியாற்ற உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.13.33 வழங்குவதாகக் கூறுவது சரிதானா எனவும் கேட்கப்படுகிறது. எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மாதத் தொகுப்பூதியத்தை ரூ.3000-மாக உயர்த்த வேண்டும் என்பது இந்தத் திட்டத்தில் பணியாற்றுவோரின் கோரிக்கை.
 
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட அறிவொளி- வளர் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கத்தின் தலைவர் பொ. செல்வம், செயலாளர் கே. கலைச்செல்வன் ஆகியோர் கூறியது:
 
                                கடந்த 8 ஆம் தேதி சங்கத்தின் சார்பில் சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்த இருந்தோம். இதனால்தான், ஒன்றியத்தில் உள்ள சுமார் 4 பணியாளர்களுக்கு மட்டும் ரூ.400 தொகுப்பூதியத்தில் பணி ஆணை வழங்கியுள்ளனர். எங்களது கோரிக்கையான அனைவருக்கும்          வேலைவாய்ப்பையும், பகுதி நேர தொகுப்பூதியமாக ரூ.3000 நிர்ணயித்து அரசு எங்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் சங்கம் சார்பில் வழக்கு தொடர உள்ளோம் என்றனர் அவர்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior