சென்னை:
கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தேர்வுத் தேதி எப்போது எனத் தெரியாமல் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.
தேர்வுத் தேதி அறிவிக்கப்படாததால் பல மாதங்களாக தனியார் பயிற்சி நிறுவனங்களிடம் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் செலவழித்து தொடர்ந்து படித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 1,576 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதனுடன், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான பின்னடைவு காலி பணியிடங்கள் 1,077 என மொத்தம் 2,653 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியானது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க 2010 ஆகஸ்ட் 20 கடைசி நாள் என்றும், தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும் தேர்வுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரிவுகள் மூலம் பதவி உயர்வு: அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களைத் தேர்வு மூலம் நிரப்பும் பணியை அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு தேர்வின்போதும் விண்ணப்பங்களைப் பரிசீலித்தல், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்குதல் ஆகிய பணிகளுக்கு தனித்தனியே பிரிவுகள் தொடங்கப்படும்.
இந்தப் பிரிவுகளுக்கு பதவி உயர்வின் மூலம் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு பிரிவுக்கும் பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர், அலுவலக உதவியாளர் ஆகியோர் நியமிக்கப்படுவது வழக்கம். ÷இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கான பிரிவுகளை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன காரணம்?
பிரிவுகள் தொடங்கப்பட வேண்டுமானால், அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வுக்கு சம்பந்தப்பட்டவர்களின் பட்டப் படிப்பு என்ன என்பது ஆராயப்படும். திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் எனில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதான், கிராம நிர்வாக அலுவலர் தேர்வை நடத்துவதில் உள்ள சிக்கல் எனத் தெரிகிறது. 60-க்கும் மேற்பட்டோர்: அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 60-க்கும் மேற்பட்டோர் திறந்தநிலை பல்கலைக்கழங்களில் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் ஆவர்.
கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு பிரிவுகளைத் தொடங்கி பதவி உயர்வு மூலம் அதிகாரிகளை நியமிக்கும் போது திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை என்ன செய்வது எனத் தெரியாமல் உயரதிகாரிகள் திணறி வருவதாகக் கூறப்படுகிறது. அரசிடம் கருத்து கேட்பு: இதனிடையே, தேர்வாணைய அதிகாரிகள் வேறுவகையான உத்தியைக் கையாள முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. அதாவது, இப்போது திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் நேரடியாக படித்து பட்டம் வாங்கியவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சலுகை அளிக்கலாமா எனக் கருதுகிறது.
அதாவது, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் மூன்றாண்டு பட்டப் படிப்புகளை முடிக்க வசதியாக ஐந்தாண்டுக் காலத்தை அளித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாமா என யோசித்து வருகிறது தேர்வாணையம். இதற்காக, அரசிடம் கருத்து கேட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
போட்டா போட்டி:
இந்த நிலையில், தேர்வாணைய அலுவலகத்துக்குள் இருபெரும் பிரிவுகளுக்கு போட்டா போட்டி நிலவி வருகிறது. திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மூலம் நேரடியாக பட்டம் பெற்றவர்கள், 10-ம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் கல்லூரியில் படிப்பு என வழக்கமான முறையில் பட்டம் வாங்கியவர்கள் என இருபிரிவுகளாகப் பிரிந்து போட்டா போட்டியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் வி.ஏ.ஓ. தேர்வை நடத்துவதில் தொடர்ந்து கால தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதைப் போக்க தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக