உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 29, 2010

கடலூர் சாலைகளில் வாகன ஓட்டிகளை மிரட்டும் சாலைப் பள்ளங்கள்


கடலூர் மஞ்சக்குப்பம் தெற்கு கவரைத் தெருவில் சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளம்.
 

கடலூர்:

               கடலூர் சாலைகளில் அடிக்கடி ஏற்படும் திடீர் பள்ளங்கள், ஆழ்குழிகள், வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் பயமுறுத்தி  வருகின்றன.  

                     கடலூரில் ரூ.66 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் 3 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்காக சாலைகளில் நெடுகிலும் 15 அடி ஆழம் வரை, பள்ளம் தோண்டப்படுகிறது. ஆனால் இப்பள்ளங்களை காண்ட்ராக்டர்கள் முறையாக மூடுவது கிடையாது.  சாலைகளில் தோண்டப்பட்ட மண்ணை பொக்லைன் இயந்திரம் மூலம் தள்ளி மூடிவிட்டு சென்று விடுகிறார்கள். இப்பள்ளங்கள் முறையாக மூடப்பட்டனவா என்று அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடுவதும் கிடையாது. தோண்டப்படும் மண்ணை அருகில் உள்ள வீட்டுச் சொந்தக்காரர்களும், தங்கள் உபயோகத்துக்கு காண்ட்ராக்டரின் உடந்தையுடன் அள்ளிச் சென்று விடுகிறார்கள்.  

                    மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை உள்ளிட்ட சில முக்கிய சாலைகளில் தோண்டப்பட்ட இடங்களில் மட்டும், 2 அடி அகலத்துக்கு கான்கிரீட் தளம் அமைக்கிறார்கள். அதற்கும் முறைப்படி சரியான அளவுக்கு ஆற்றுமணல் கொட்டி, கான்கிரீட் தளம் அமைப்பது இல்லை.  ÷பெரும்பாலான சாலைகளில் களி மண்ணால் மூடப்பட்ட பள்ளங்கள் மீது காண்ட்ராக்டர்கள் சாதாரணமான முறையில் தார்ச்சாலை அமைத்து விடுகிறார்கள். இதனால் அடித்தளம் வெற்றிடமாகவும், வலுவற்றும், முறையாக இல்லாததால், சாலைகள் அமைத்த ஒரு வாரத்தில், ஏற்கெனவே தோண்டப்பட்ட இடங்களில் பள்ளங்களும், 10 அடி ஆழத்துக்கு திடீர் குழிகளும்  ஏற்படுகின்றன.  

                  எதிர்பாராமல் ஏற்படும் இப்பள்ளங்கள் மற்றும் ஆழ்குழிகளில் வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் விழுந்து பெரும் விபத்தைச் சந்திக்க நேரிடுகிறது. கனரக வாகனங்களும் சற்றும் எதிர்பாராமல் இந்தப் பள்ளங்களில் சிக்கி, பளுதூக்கும் இயந்திரங்கள் வந்தால்தான் அவற்றை வெளியே எடுக்க முடியும் என்ற பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படுகின்றன. கடலூர் நகரம் வண்டல் களிமண் படிந்த பூமியாக இருப்பதால், முறையான அடித்தளம் அமைக்காமல் சாலைகள் போடுவது, இத்தகைய நீண்டகால பிரச்னைகளுக்கு இடம் அளித்து விடுகிறது.  

                            எனவே பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு, தோண்டப்பட்ட இடங்களில் முறையாக ஆற்று  மணல் கொட்டி, நன்றாக அடித்தளம் அமைத்து வலுவான பிறகு சாலைகளை அமைக்க வேண்டும் என்று  கடலூர் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior