உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 29, 2010

ரோபோக்களுக்கான பந்தயம்: களத்தில் பொறியியல் மாணவர்கள்


தாங்கள் வடிவமைத்த ரோபோக்களுடன் கல்லூரி மாணவர்கள்.
 

              சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தாங்கள் வடிவமைத்த ரோபோக்களுடன் பொறியியல் மாணவர்கள் வியாழக்கிழமை அணிவகுத்து நின்றனர்.  உள்நாட்டுப் போர்கள், ஆபத்தான சூழல்களில் ராணுவத்துக்குப் பயன்படும் வகையில் ஆளில்லாத வாகனங்களை வடிவமைக்கும் பணியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

                  ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ரோபோ போட்டி நடத்தப்படுகிறது.  இந்தப் போட்டியில் பங்கேற்க மொத்தம் 240 கல்லூரிகள் விருப்பம் தெரிவித்திருந்தன. தங்களது ரோபோ மாடல்களையும் விண்ணப்பங்களுடன் கல்லூரிகள் அனுப்பியிருந்தன.  இதில் ரோபோ வடிவமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து 14 கல்லூரிகள் மட்டும் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன.  

                    சென்னை ஐ.ஐ.டி., கோரக்பூர் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், ஹைதராபாத் ஐ.ஐ.டி. உள்ளிட்ட புகழ்பெற்ற கல்லூரிகளின் மாணவர்கள் இந்தப் போட்டிக்கு தேர்வாகியிருந்தனர்.  இவர்களின் பல மாத உழைப்பில் உருவாகியிருந்த இயந்திரங்கள் வியாழக்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியிருந்த ரோபோ, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.  அர்ஜுன் டாங்கியை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த இயந்திரம், தடைகளையும், தனக்கான பாதையையும் துல்லியமாக அறிந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக எம்.ஐ.டி. மாணவர் கணேஷ் தெரிவித்தார். 

                     வில்லிவாக்கத்தில் இருந்து அண்ணா நகருக்கு இந்தப் பாதை வழியே செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டால் போதும். அனைத்து விதமான தடைகளையும் கடந்து குறிப்பிட்ட வழியே அது இலக்கை அடையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  "எங்களது அணியினரின் 4 மாத உழைப்பில் உருவான இந்த இயந்திரம், படிக்கட்டுகளில் கூட மிகச் சுலபமாக ஏறி இறங்கும்' என்கிறார் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர் பவானி பிரசாத்.  சாலைகளில் ஆளில்லாத வாகனங்களை இயக்குவதற்கு முன்னோட்டமாக இந்த ரோபோக்களை உருவாக்கியுள்ளதாக மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.  

                       ரோபோ போட்டிக்காக பிரத்யேகமான தளம், போர் வாகனங்கள் ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சிமென்ட் தரையிலும், ஜல்லிக் கற்களிலும், செயற்கைத் தடைகளையும் தாண்டி ரோபோக்கள் தங்களது இலக்கை அடைய வேண்டும்.  தடைகளை ரோபோக்கள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதற்கும், எவ்வளவு விரைவாக தங்களது இலக்கை அடைகின்றன என்பதற்கும் மதிப்பெண் வழங்கப்படும்.  அதனடிப்படையில் அடுத்தச் சுற்றுக்கு 5 அணிகள் தேர்வு செய்யப்படும். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior