உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 29, 2010

நெய்வேலி வேலை நிறுத்தம் வாபஸ்: தொழிற்சங்க பிரதிநிதிகள் கருணாநிதிக்கு நன்றி நேரில் தெரிவித்தனர்


 

                      நெய்வேலி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி 40 நாட்கள் வேலை நிறுததம் செய்தனர்.

                         முதல்-அமைச்சர் கருணாநிதி தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று முதல்- அமைச்சர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் முன்னிலையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

                      தொ.மு.ச. சார்பில் அதன் தலைவர் செ.குப்புசாமி, பொதுச்செயலாளர் ஆர். கோபாலன், ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் பழனிவேல், பாட்டாளி தொழிற் சங்கம் சார்பில் வேல்முருகன் எம்.எல்.ஏ., பெருமாள், தினகர், அன்பழகன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேகர், ஐ.என்.டி.யு.சி. சார்பில் ஜானகிராமன், எல்.எல்.எப். சார்பில் குமார் உள்பட பல்வேறு பிரதிநிதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர் தொ.மு.ச. தலைவர் செ. குப்புசாமி அளித்த பேட்டி வருமாறு:-

                    என்.எல்.சி. நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் பாட்டாளித் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்வதற்கு ஏற்ற ஊதியம் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 39 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.

                         தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி, மத்திய அரசுக்கு இது குறித்து எழுதி, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக சுமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து நிர்வாகம் மீண்டும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார்கள். அதன் அடிப்படையில் இப்போது ஒரு நல்ல ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக முதல்- அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டோம்.

கேள்வி:- ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் ஆக்குகிறோம் என்று நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதா?

பதில்:- அனைத்துக் கோரிக்கைகளும் பரிசீலனையில் இருக்கிறது. அனைத்துச் சங்கங்களும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன.

கேள்வி:- நிர்வாகம் இதை எப்படிச் செய்யப்போகிறது?

பதில்:- இது மத்திய அரசின் கொள்கை முடிவு. எனவே, மத்திய அரசை அணுகியிருக்கிறோம். இந்தப் பிரச்சினையில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

பா.ம.க. எம்.எல்.ஏ. வேல் முருகன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி: முதல்- அமைச்சரைச் சந்தித்து என்ன பேசினீர்கள்?

பதில்:- 39 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த என்.எல்.சி. தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இந்தப் பிரச்சினையில் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளை பெற்றுத் தர உதவியாக இருந்த முதல்- அமைச்சரை, இன்றைய தினம் போராட்டக் குழுவினர் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

                    மேலும், இந்த வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து காவல் துறையினர் பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். சில இடங்களில் தொழிலாளர் கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

                    எனவே, அந்த வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, சுமுகமான சூழ் நிலைக்கு வழி வகுத்திட உத்தரவிட வேண்டுமென்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டோம். தற்போது ஒரு சுமூகமான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. எனினும், கடந்த 30 ஆண்டுகளாக அங்கே ஒப்பந்தத் தொழிலாளர்களாக 5 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களை நிரந்தரம் செய்ய உதவிட வேண்டுமென்று முதல்வரைக் கேட்டுக்கொண்டோம்.

                     அவரும் மத்திய அரசோடு இது குறித்துப்பேசி உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். அதற்காகவும் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior