உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 18, 2010

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள்


                     அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. 
 
                 அதேநேரம், தங்களுக்கு பணிச் சுமை அதிகரித்துள்ளது என அந்தக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 163 உள்ளன. இவற்றில் மொத்தம் 10 ஆயிரத்து 600 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறுதல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை அரசின் அனுமதி பெற்று இக்கல்லூரிகள் நிரப்பிக் கொள்ளலாம். 
 
                  கடந்த 1999 வரை இந்தக் கல்லூரிகளில் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் நேரடி அனுமதியின் பேரில், அந்தந்தக் கல்லூரிகளே நிரப்பி வந்தன. இதில் அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகள் நேரடியாகவும், சிறுபான்மை அல்லாத கல்லூரிகள் "கல்லூரி குழு' மூலம் பணியிடங்களை நிரப்பி வந்தன. 1999-ம் ஆண்டுக்குப் பின் தமிழக அரசின் அனுமதி பெற வேண்டும் என புதிய நிபந்தனை கொண்டுவரப்பட்டது.
 
                இந்த நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக 4-4-2000 தேதியன்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய ஒழுங்கு முறையைக் கொண்டுவந்தது. இதன்படி, அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத கல்லூரிகள் இரண்டும் தேர்வுக் குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்து, பின்னர் கல்லூரி குழு மூலம் பணி நியமனம் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
 
                   இந்த உத்தரவை ஏற்காத அரசு உதவி பெறும் கல்லூரிகள், 2000-ம் ஆண்டுக்குப் பின் காலியான பணியிடங்களில் தாங்களாகவே குறைந்த ஊதியத்தில் கௌரவ விரிவுரையாளர்களை தாற்காலிகமாக நியமனம் செய்து கொண்டன.2001-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை அரசுத் துறை மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், பள்ளிகளில் புதிதாக பணியாளர்களை தேர்வு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2006-ம் ஆண்டு 600 பணியிடங்களையும், 2007-ம் ஆண்டு 2 ஆயிரம் பணியிடங்களையும் நிரப்பிக் கொள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. 
 
                    அப்போது, சிறுபான்மை கல்லூரிகள் யுஜிசி-யின் உத்தரவை பின்பற்றாமல் தாங்களாகவே பணியிடங்களை நிரப்பிக் கொண்டன. ஆனால், சிறுபான்மை அல்லாத கல்லூரிகள் வேறு வழியின்றி, யுஜிசி விதிமுறைப்படி தேர்வுக் குழுவை நியமித்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொண்டன. இருந்தபோதும், 300-க்கும் மேற்பட்ட இடங்கள் எஞ்சின. மேலும், 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இந்தக் கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் செய்யப்படாததால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது.குறிப்பாக சிறுபான்மை அல்லாத கல்லூரிகளிலேயே ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன. 
 
                       இவற்றில் ஒரு சில கல்லூரிகளில் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகி இருப்பதோடு, பணிச் சுமை அதிகரித்திருப்பதாக அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு சிறப்பு முயற்சி மேற்கொண்டு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயகாந்தி கூறினார். 
 
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரக இணை இயக்குநர் (நிதி) டி.ஆர்.ஏ. தேவகுமார் கூறியது: 
 
                  அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 2006 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் அரசு அனுமதித்தும் நிரப்பப்படாத இடங்கள் எத்தனை உள்ளன? மேலும் 30-9-2010 அன்று வரை நிரப்பப்படாத இடங்கள் எத்தனை? என்பவை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்குமாறு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
                        மேலும் இந்தக் கல்லூரிகளில் புதிதாக 1,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் இதற்கான அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, அடுத்த இரண்டு மாதங்களில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கிவிடும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior