கடலூர்:
கடலூர் மாவட்ட கூட்டுறவு விற்பனை (மார்க்கெட்டிங் சொசைட்டி) சங்கங்கள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
57-வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழா கடலூரில் திங்கள்கிழமை கொண்டாடப் பட்டது.
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நலத் திட்ட உதவிகளை வழங்கியும், சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் பேசியது:
கடலூர் மாவட்டத்தில் 2007-08-ம் ஆண்டில் 400 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12 கோடியும், 2008-09ம் ஆண்டில் 8,300 குழுக்களுக்கு ரூ.72 கோடியும், 2009-10ம் ஆண்டில் 12,462 குழுக்களுக்கு ரூ.106.5 கோடியும் சுழல்நிதி வழங்கப்பட்டு இருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டி இல்லாக் கடன் வழங்க ரூ.190 கோடி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.130 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. 6 இடங்களில் மண் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் மருந்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. முதல் கட்டமாக கடலூர், பண்ருட்டியில் இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும். பின்னர் மாவட்டத்தின் பிற ஊர்களிலும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் மருந்து விற்பனை செய்யப்படும். கடந்த ஆட்சி காலத்தில் கடலூர் மாவட்டத்தில் 167 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் நலிந்து உருக்குலைந்து கிடந்தன. அவற்றுக்கு ரூ.42 கோடி மானியம் வழங்கப்பட்டது இந்த ஆட்சியில் என்றார் பன்னீர்செல்வம்.
விழாவுக்கு ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ரவிக்குமார், கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பிரான்ஸிஸ் மேரி ஞானமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர் எஸ்.ஆர். வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர் ந.மிருணாளினி திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.
கோயில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள்
முன்னதாக திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் நடந்த நிகழ்ச்சியில், கடலூர் மாவட்டத்தில் உள்ள நிதி வசதி இல்லாத கோயில்களில் அர்ச்சனை செய்யும் அர்ச்கர்கள், பூசாரிகள் 399 பேருக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தங்கராஜ், துணை ஆணையர் ஜெகந்நாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக