உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 18, 2010

புதுச்சேரி சாராயக்கடைக்கு பெண்ணையாற்றில் சாலை : தமிழக அரசு அதிகாரிகள் அலட்சியம்

நெல்லிக்குப்பம் : 

               புதுச்சேரி மாநில சாராயக் கடை உரிமையாளர் பெண்ணையாற்றின் கரையை உடைத்து வியாபாரத்திற்காக விதிமுறைகளை மீறி சாலை அமைத் திருப்பதை தமிழக அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி முள்ளிகிராம்பட்டு பெண்ணையாற்றின் தென் கரையில் தமிழக எல்லையையொட்டி புதுச்சேரி மாநிலத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இதை காரணமாகக் கொண்டு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் அங்கு சாராயக்கடை வைத்தார்.
 
                 சாராயம் குடிக்க தமிழகத்தைச் சேர்ந்த "குடி'பிரியர்கள் அதிகளவில் முள்ளிகிராம்பட்டு வழியே சென்றதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இரு மாநில போலீசாரும் சேர்ந்து சாராயக் கடையை அகற்றினர்.  உடன் ஆற்றின் வட கரையில் புதுச்சேரி மாநில எல்லையில் சாராயக் கடையை துவங்கினர். ஆற்றில் மணலில் சைக்கிளிலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ செல்ல சிரமமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த "குடி' பிரியர்கள் அங்கு செல்லத் தயங்கினர். 

               புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவரின் சாராயக்கடைக்கு தமிழகத்தையொட்டிய "குடி' மகன்கள் வராததால் ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் கிளை கடையை துவக்கினார். ஓரளவிற்கு சாராயக் கடைக்கு தமிழக வாடிக்கையாளர்கள் சென்றாலும் பெரும்பாலானோர் ஆற்று மணலில் நடந்தோ, வாகனங்களிலோ செல்ல முடியாமல் சிரமடைந்தனர். இதனைப்பார்த்த சாராயக் கடை உரிமையாளர் தமிழக "குடி'பிரியர்களை வரவழைக்க புது யுக்தியை கடை பிடித்தார். வியாபாரத்திற்காக தமிழக எல்லையில் உள்ள ஆற்றின் கரையை உடைத்து அங்கிருந்து சாராயக்கடை வரை ஆற்றில் கிராவல் கொட்டி சாலையை பலப்படுத்தினர்.

                   தற்போது அவர்கள் எதிர்பார்த்தது போல் தமிழக பகுதியான நெல்லிக்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த "குடி' மகன்கள் தமிழக "டாஸ்மாக்' கடைகளை மறந்து "சீப் அண்ட் பெஸ்ட்'ஆக புதுச்சேரி மாநில சாராயக் கடைக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர். சாராய வியாபாரத்திற்காக விதிமுறைகளை மீறி ஆற்றில் சாலை அமைக்கப்பட்டுள்ளதை தமிழக அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. முள்ளிகிராம்பட்டு வழியாக சாராயம் குடித்து விட்டு வருபவர்களால்  அப்பகுதியில் பிரச்னைகள் உருவாகி சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் தண்ணீர் ஓடும் காலங்களில் குடித்து விட்டு வருபவர்கள் ஆற்றில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior