கடலூர் :
காயகல்ப மூலிகை என்றும் மூப்பைத் தடுக்கும், ரத்த விருத்தி செய்யும் சக்தி கொண்டது என்றும், மருத்துவ உலகில் நெல்லிக்காய் சிறப்பாகப் பேசப்படுகிறது.
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவை கொண்ட நெல்லிக்காயில், வேறுஎந்த கனிகளிலும் இல்லாத அளவுக்கு வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ஒரு ஆரஞ்சு பழத்தில் இருப்பதுபோல் 20 மடங்கு வைட்டமின் சி, ஒரு நெல்லிக்காயில் உள்ளது. ஒரு கிராம் நெல்லிக்காயில் 720 மி.கிராம் வைட்டமின் சி, 28 மி.கிராம் வைட்டமின் பி 1, கால்சியம் 15 மி.கிராம், பாஸ்பரஸ் 21 மி.கிராம் மற்றும் இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்களும் உள்ளன. நெல்லிக்காய் விதை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. சிறுநீரகக் கோளாறு, ரத்தசோகை, மஞ்சள் காமாலை, அஜீரணக் கோளாறு, கணயத்தில் ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் நெல்லிக்காய் பயன்படுகிறது.
எனவே நெல்லிக்காய் மருந்தாகவும், ஊறுகாய், ஜாம் உள்ளிட்ட உணவு வகைகளாகவும் சந்தையில் கிடைக்கின்றன.2,800 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு நெல்லிக்காய் கொண்டு வரப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. நெல்லி மரங்கள் மலைப் பகுதிகளில் நன்றாகவும் மற்ற பகுதிகளில் பராமரிப்புக்கு ஏற்பவும் வளர்கின்றன. வீடுகளிலும் தோட்டங்களிலும் காணப்பட்ட நெல்லி மரங்கள் தற்போது பணப் பயிராக, நூற்றுக்கணக்கான ஏக்கரில் தமிழக விவசாயிகள் பயிரிடத் தொடங்கி உள்ளனர்.
மித வெப்ப மண்டலங்களில் பயிரிடப்பட்டு வந்த நெல்லி, தற்போது, வெப்ப மண்டலங்களிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 1,000 டன் நெல்லிக்காய் தேவை இருப்பதாகவும், தொடர்ந்து தேவை அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சூப்பர் ரகம்கோவை வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கிய பி.எஸ்.ஆர். 1 என்ற நெல்லி ரகம் தமிழகத்தில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதில் மருத்துவ குணம் அதிகம் என்பதால் இதற்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
மற்றும் வட இந்திய ரகங்களான சாக்கியா, என்.ஏ. 7, காஞ்சன் உள்ளிட்ட நெல்லி ரகங்களும் பரவலாகப் பயிரிடப்படுகின்றன.எங்கு கிடைக்கும்?அதிகம் செலவில்லாமல் நல்ல வருவாய் கிடைக்கும் பயிராக நெல்லிக்காய் விவசாயம் போற்றப்படுகிறது. நெல்லிக் கன்றுகள் தஞ்சை, சேலம், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நர்சரிகளில் கிடைக்கும். தண்ணீர் தேங்காத நிலங்களில் நெல்லி செழித்து வளரும். எல்லா காலங்களிலும் நெல்லி பயிரிடலாம்.
ஏக்கருக்கு 200 கன்றுகள் வரை நடப்படுகிறது. 15 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை நெல்லிக்காய்கள் அறுவடை செய்யமுடியும்.முதலாம் ஆண்டு ஏக்கருக்கு | 20 ஆயிரம் வரை செலவாகும். நட்டு 3-ம் ஆண்டு முதல் காய்கள் கிடைக்கும். 5-ம் ஆண்டு முதல் அதிக மகசூல் கிடைக்கும். 3 ஆண்டுகள் வரை நெல்லித் தோப்பில் மண் வளம் தரும் ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம் என்றும், அதன் மூலம் கணிசமாக வருவாய் ஈட்ட முடியும் என்றும் வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிக செலவில்லாமல் ஆண்டுக்கு ஏக்கருக்கு | 1 லட்சம் வரை லாபம் கிடைக்கும். வியாபாரிகள் தோப்புக்கே வந்து நெல்லிக்காய்களை கொள்முதல் செய்கிறார்கள் என்றும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.விவசாயி பேட்டி
இதுகுறித்து திட்டக்குடியில் நெல்லி சாகுபடி செய்துள்ள விவசாயி வேணுகோபால் கூறியது:
நான் ஒரு ஹெக்டேரில் நெல்லி பயிரிட்டுள்ளேன். செலவில்லாமல் அதிக வருவாய் தரும் பயிர் நெல்லிக்காய். வறண்ட பிரதேசங்களில் ஓரளவுக்கு தண்ணீர் இருந்தால் போதும். நெல்லிக்காய் விவசாயத்தை சிறப்பாகச் செய்து நல்ல லாபம் பெறமுடியும். 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல்லிக்காய் விற்பனை செய்வதில் அதிகம் பிரச்னைகள் இருந்தன. தற்போது சந்தை சிறப்பாக உள்ளது.
கோவை வேளாண் பல்கலைக்கழகம் நெல்லிக்காய் சாகுபடியில் உயர் தொழில் நுட்பங்களில் பயிற்சி அளிக்கிறார்கள். பயிற்சி பெற்று நெல்லி விவசாயம் செய்தால் சிறப்பாக அமையும்.கோவை வேளாண் பல்கைலக்கழகம் உருவாக்கிய பி.எஸ்.ஆர். 1 ரக நெல்லி, அதிக காய்ப்புத் திறன் கொண்டது. தமிழகத்தில் உற்பத்தியாகும் இந்த ரக நெல்லிக்காய் முழுவதும், மருந்துக்காக கேரள வணிகர்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற வடஇந்திய ரகங்கள் பெருமளவுக்கு உணவுப் பொருள்களுக்காக கொள்முதல் செய்யப்படுகிறது என்றார் வேணுகோபால்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக