சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜா, நடராஜா என கோஷமிட்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் கடந்த 13ம் தேதி துவங்கியது. தினசரி நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5.30மணிக்கு மூலவர் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருள செய்யப்பட்டது. காலை 9மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜா, நடராஜா என கோஷமிட்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
விநாயகர், முருகர் தேர்கள் முன்னதாக செல்ல தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேர்கள் நகர வீதிகளில் பவனி வந்தது. மதியம் 12மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் தேர்கள் மேல வீதி கஞ்சித்தொட்டி அருகே நிறுத்தப்பட்டது.பருவதராஜகுல சமூகத்தினரின் வழக்கப்படி மேலதாளம் முழங்க நடராஜருக்கு சீர் வரிசையுடன் பட்டு சாத்தி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்து செல்லப்பட்டு தேர் நிலையை வந்தடைந்தது. இரவு தேரில் இருந்து நடராஜரும், சிவகாமி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு லட்சார்ச்சனை பூஜை நடந்தது.தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர். தேருக்கு முன் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள் தேவார திருமுறைகள் பாடினர். டி.எஸ்.பி., சிவநேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்றுஆருத்ரா தரிசனம்இன்று (22ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டப முகப்பில் சுவாமி எழுந்தருள செய்யப்பட்டு மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மீண்டும் ஆயிரங்கால் மண்டபத்திற்குள் திருவாபரண அலங்கார காட்சி நடக்கிறது.பஞ்சமூர்த்தி புறப்பாட்டை தொடர்ந்து மதியம் 12 மணி முதல் 2மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளும் நடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக