உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 22, 2010

ஐ.ஏ.எஸ். தேர்வில் மாற்றம்: கிராமப்புற மாணவர்களைப் பாதிக்குமா?

             சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் மத்திய பணியாளர் தேர்வாணையம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை முதல்நிலைத் தேர்வு பொது அறிவு, விருப்பப் பாடம் என்று இரண்டு தாள்களை உள்ளடக்கி இருந்தது. ஆனால் இனிமேல் விருப்பப்பாடத்துக்கு பதிலாக சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் (சிசேட்) என்ற தாளைச் சேர்த்துள்ளது.

           இத்தாள் முழுக்க முழுக்க தேர்வில் பங்கேற்போரின் ஆங்கில, கணிதப் புலமை,  புரிதல் தன்மை, முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைச் சோதிக்கும் வகையில் அமையும்.  இத்தேர்வு மாற்றம் குறித்து அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே இதை மையமாக வைத்து எதிர்மறையான கருத்துகள் உலவிக் கொண்டிருக்கின்றன. இதற்குமேல் ஆங்கில, கணிதப் புலமை இல்லாதவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவியை நினைத்துப் பார்க்க முடியாது. குறிப்பாக பெரும்பாலான கிராமப்புற மாணவர்களுக்கு இந்நிலை நேரிடும் என்று சொல்லப்படுகிறது.

             இது உண்மைதானா, தேர்வு மாற்றம் உண்மையிலேயே கிராமப்புற மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதா என்று ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் நடத்தி வருபவர்கள் பகிர்ந்து கொண்டது.

சைதை துரைசாமி (தலைவர், மனிதநேயம் ஐ.ஏ.எஸ்.  இலவச பயிற்சி மையம்):

             உயரிய பொறுப்புகளில் அமருபவர்களுக்கு முடிவெடுக்கும் திறன் அவசியம். இந்தத் திறன் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுபவர்கள் அனைவருக்கும் இருந்து விடுவதில்லை. இந்த நிலையில் சிசேட் என்ற தேர்வின் மூலமே ஒருவரின் முடிவெடுக்கும் திறனை தேர்வாணையம் சோதித்துவிடும் நிலை உருவாகியுள்ளது வரவேற்கத்தக்கது. சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் சில விருப்பப்பாடங்களை எடுத்துப் படிப்பவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதும், சில விருப்பப்பாடங்களைப் பயில்வோர் குறைவான மதிப்பெண்களைப் பெறுவதும் வழக்கமாக இருந்து வந்தது. 

             இந்தப் பாகுபாட்டுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களின் திறனையும ஒரே தளத்தில் சோதிக்கும் நிலை உருவாகியுள்ளது.கலைப்படிப்பைப் படித்து வருபவர்களுக்கும், தாய்மொழியில் கல்வி பயின்றுவரும் மாணவர்களுக்கும் சிசேட் தேர்வை எதிர்கொள்வது ஆரம்பத்தில் சிரமம்தான்.  இதை மறுப்பதற்கில்லை. ஆனால் உரிய வகையில் பயிற்சி பெற்றுவிட்டால் அவர்களின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இத்தேர்வு முறையால் கிராமப்புற மாணவர்கள் அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை. தன்னம்பிக்கை, கடினமான உழைப்பு, விடாமுயற்சி இம்மூன்றும் இருந்தால் எத்தகைய தடையையும் தகர்த்தெறிய முடியும். இம் மூன்றும் பெரும்பாலான கிராமப்புற மாணவர்களுக்கு உண்டு என்பதை என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும்.

சங்கர் (தலைவர், தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்):

             மாணவர் சமுதாயத்தில் 2 சதவீதம் பேர் மட்டுமே ஆப்டிடியூட் தேர்வைப் பின்புலமாகக் கொண்டுள்ளனர்.அதிலும், ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றவர்களால் மட்டுமே  இரண்டாம் தாளான சிசேட் தாளை அணுகுவதில் தேர்ச்சி பெறக்கூடிய நிலை உள்ளது. இந்த இரண்டாம்தாள் முழுக்க முழுக்க கணிதம், ஆங்கில அறிவைச் சோதிப்பதாகவே அமைந்துள்ளது. இதன் மூலம் ஆங்கில, கணிதப்புலமை இருந்தால் மட்டுமே முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற முடியும். இந்த ஆப்டிடியூட் பாடம் எந்தப் பள்ளி, கல்லூரிகளிலும் கற்றுத்தரப்படுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் பயிற்சிக்காகத் தனியார் பயிற்சி நிறுவனங்களையே நாட வேண்டிய கட்டாய நிலைக்கும் மாணவர்கள் ஆளாகின்றனர்.

            பயிற்சி நிறுவனங்களும் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்களுக்கே முன்னுரிமை தருகின்றன. இதனால் சிசேட் தாளானது, உயர் கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் அணுகுவதற்கு உகந்த வகையில் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டதோ என்ற சந்தேகம் கிராமப்புற மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இத்தேர்வு மாற்றத்தால் பிற்காலத்தில் கிராமப்புற மாணவர்கள் மிகப் பெரிய பொறுப்புகளுக்கு வரும் வாய்ப்புகள் மங்கிவிடும் என்பதும் உண்மையே.

சுடரொளி (தலைமை நிர்வாகி, தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்):

               சிசேட் என்ற புதிய பாடத் திட்டம் மாணவர்களுக்கு குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு, கிலியை ஏற்படுத்தியுள்ளது உண்மைதான். இதுகுறித்த பயம் தேவையற்றது என்பதே எனது கருத்து.இதற்கு முன்னர் விருப்பப் பாடத் தேர்வில் ஆழமான அறிவும், மனப்பாடம் செய்யும் திறனும் மாணவர்களுக்குத் தேவைப்பட்டது. அதனால் கிராமப்புற மாணவர்கள் இதர சிறப்பான கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களுடன் போட்டியிடுதலில் சிரமம் ஏற்பட்டது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிசேட் பாடத்திட்டத்தில் மாணவர்களின் புரிந்து கொள்ளும் தன்மை மட்டுமே சோதிக்கப்படுகிறது. எந்த அளவுக்கு அவர்கள் அப்பாடத்தில் பயிற்சி பெறுகிறார்களோ அந்த அளவுக்கு வெற்றி அவர்கள் வசமாகும்.மேலும் இப்பாடத்தைப் பயில்வதால் மாணவர்களுக்கு ஆங்கிலம் ஒரு பெரும் தடையாக இனிமேல் இருக்கப்போவதில்லை. 

               அவர்களின் ஆங்கில அறிவு வளர்வதால், நேர்முகத் தேர்வையும் எளிதாக எதிர்கொள்ள இயலும். அதுமட்டுமல்லாமல், சிசேட்டுக்கு தயாராவதன் மூலம் கேட், மேட், வங்கித் தேர்வு போன்ற இதர போட்டித் தேர்வுகளிலும் கலந்து கொள்ள ஏதுவாகிறது. இப்பாடத்துக்குத் தயாராவதால் கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களுக்கு நிகராக தங்களை வெளிப்படுத்தும் அளவுக்குத் திறனை வளர்த்துக்கொள்ள இயலும். ஆக, இப்பாடம் எந்தப் பாகுபாடுமின்றி மாணவர்களை ஒரே தட்டில் சமமாய்ப் போற்றும் தன்மையைக் கொண்டது என்பது மறுக்க இயலாத உண்மை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior