கடலூர்:
போக்குவரத்துக்குச் சிறிதும் லாயக்கற்ற நிலையில், கடலூர் நகரச் சாலைகள் பழுதடைந்து கிடப்பதால், இரு சக்கர வாகனங்களில் செல்லும், மாணவ மாணவியர், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் சிதைந்து கிடந்த சாலைகளால், கடலூர் மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் வட கிழக்குப் பருவமழையும் சேர்ந்து, கடலூர் மக்களை பெரிதும் புரட்டிப் போட்டுவிட்டது. கடலூர் நகரச் சாலைகள் அனைத்தும் பல்லாங்குழிகளாக மட்டுமன்றி, சிறிய குளம் குட்டைகளாகவும் மாறிவிட்டன.
அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், சேறும் சகதியுமாகப் பல சாலைகள், சேதமடைந்த தார்ச் சாலைகளில் எங்கே பள்ளம், எங்கே மேடு என்று தெரிந்துகொள்ள முடியாத நிலையில், ஏதோ ஒரு அனுமானத்தில்தான் சாலைகளில் செல்ல வேண்டிய பரிதாபநிலை கடலூர் மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் செல்லும் மாணவ மாணவியர், பொதுமக்கள் இந்த பல்லாங்குழிகளில் தடுமாறிக் கொண்டு செல்லும் நிலையில், கார்களும், பஸ்களும், லாரிகளும் பின்னால் வந்து, காதுகிழிய காற்றொலிப்பானை ஒலிப்பது, நீ எப்படியும் தொலைந்து போ, எனக்கு வழி விடு, என்பதுபோல் இருக்கிறது, 4 சக்கர வாகன ஓட்டிகளின் இத்தகைய கொடுஞ்செயல்.
இதன் காரணமாக கடலூரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ மாணவியர், பொதுமக்கள் பலர் சாலைகளில் உள்ள சாக்கடை நீரால் அபிஷேகம் செய்யப்பட்டும், பள்ளங்களில் விழுந்து கைகால்களை உடைத்துக் கொள்ளும் நிலையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெரிசல் மிருந்த நெல்லிக்குப்பம் சாலை (அரசு மருத்துவமனைச் சாலை) ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை, 30 ஆண்டுகளுக்கு மேலாக உறுதியுடன் இருந்தது.
அதற்கு மேல் போடப்பட்ட தார்ச் சாலையோ, எத்தனை முறை புதுப்பித்தாலும் சில மாதங்களிலேயே சிதைந்து சின்னா பின்னமாகி விடுகிறது. அத்துடன் பாதாளச் சாக்கடைக்குத் தோண்டப்பட்ட இச் சாலை இன்று எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. நெரிசல் மிகுந்த இச்சாலையில், அரசு மருத்துவமனைக்கு தினமும் வரும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளின் நிலை இன்னும் பரிதாபம்.
இச்சாலையில் வாகனங்களை கட்டுப்படுத்தி, நோயாளிகள் கடந்து செல்ல உதவுவோமே என்ற எண்ணம், காவல் துறைக்கும் சற்றும் இல்லாமல் போனது, மேலும் வேதனை அளிப்பதாக உள்ளது. அமைச்சர்களும் ஆட்சியரும், உயர் அதிகாரிகளும் வரும்போது மட்டும், தாங்கள் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் போலீசார், மற்ற நாள்களில், மக்களுக்கு உதவ வேண்டிய நிலையில், எங்கே போய்விடுகிறார்கள் என்பதுதான் சாதாரண மக்களின் வருத்தம் தோய்ந்த கேள்வி. சாலைகள் சீர்கேட்டால், அன்றாடம் டேங்கர் லாரிகள், டிராக்டர்கள், பஸ்கள் அங்காங்கே சாலைகளில் விழுந்து கிடக்கும் பரிதாப நிலை, அதனால் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக சாலைப் பணிகள் அனைத்தையும் முடித்து விடுவோம், பாதாளச் சாக்கடைப் பணிகளை முடித்து விடுவோம் என்று அள்ளித் தெளித்த வாக்குறுதிகள் எல்லாம், கனமழையில் கரைந்து போய்விட்டன.
இதன் விளைவு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தில், ஆங்காங்கே விழுந்து, படுகாயம் காயம் அடைவோரின் ரத்தமும் கலந்து ஓடத் தொடங்கி இருக்கிறது கடலூர் நகரில். குளிரூட்டப்பட்ட அரசு வாகனங்களில் பவனி வரும் ஆட்சியாளர்களுக்கு, மக்கள் மீது எப்போது கருணை பிறக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக