கடலூர்:
மழை ஓய்ந்து 10 நாள்கள் ஆகியும் கடலூர் நகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட நகர்களில் வெள்ளம் வடியவில்லை. கடலூர் நகரில் ஒரு மாதமாகப் பெய்த கன மழையாலும், நகரின் வழியாகப் பாய்ந்து செல்லும் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு ஆகியவற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் 150க்கும் மேற்பட்ட நகர்களில், 5 அடி உயரத்துக்கும் மேல் தண்ணீர் தேங்கி மக்களை பெரிதும் அல்லல்படுத்தி விட்டது.
இதனால் இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில நகர்களில் வசிக்கும் மக்கள், தாற்காலிகமாக வீடுகளைக் காலி செய்துவிட்டு உறவினர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். பலர் இன்னும் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. வில்வராயநத்தம் ஆனந்தன் நகர், கோண்டூர் ராம்நகர், திருப்பாப்புலியூர் காமாட்சி நகர், ராஜம் நகர், சித்ரா நகர், வண்டிப்பாளையம் கண்ணகி நகர், ஆல்பேட்டை தேவநாதன் நகர், குண்டுசாலை குமரப்பன் நகர், டெலிபோன் காலனி, திடீர்குப்பம், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நகர்களில், தேங்கிய மழைநீர் இன்னமும் வடியவில்லை.
பல நகர்களில் இன்னமும் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஏராளமான நகர்களில் கொஞ்சம் இருக்கும் தார்ச் சாலைகளும், இப்போதுதான் வெளியே தலைகாட்டத் தொடங்கி உள்ளன. வீடுகளைச் சுற்றியும், காலியாக இருக்கும் வீட்டு மனைகளிலும் இன்னமும் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. நகராட்சி நிர்வாகம், விரல் விட்டு எண்ணக் கூடிய சில நகர்களில், மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீரை வெளியேற்றினோம் என்று சொல்லிக் கொண்டுள்ளது.
கடலூரில் வடிகால் வசதிகளை ஒழுங்காக நிறைவேற்றாததே இத்தனை இன்னல்களுக்கும் காரணம் என்கிறார்கள் ஆண்டுக்கு 10 கோடிக்கு மேல் வீட்டுவரி செலுத்தும் நகரப் பொதுமக்கள். கடலூரில் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில், மழைநீர் தேங்கி பொதுமக்களை அல்லல்படுத்தும் நிலை மாற, ஒருங்கிணைந்த வடிகால் திட்டம் ஒன்றை உருவாக்கி, மாநில அரசின் அங்கீகாரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்கிறார், கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக