
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் நடராஜப்பெருமானின் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்குமேல் நடைபெற உள்ளது. பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நடராஜர் கோயிலில் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான ஸ்ரீமந் நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித் தனி தேர்களில் கீழவீதி தேரடி நிலையிலிருந்து புறப்பட்டு தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக மாலை 5 மணிக்கு கீழவீதி தேர்நிலையை அடைந்தனர்.
தேர்களுக்கு முன்பு தில்லை திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள், திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப் பணியை மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தில்லைத் திருமுறைக்கழகத் தலைவர் புலவர் ச.சுந்தரேசம் பிள்ளை செய்திருந்தார்.திருப்பனந்தாள் காசி மடத்தின் சார்பில் திருப்பல்லாண்டு ஓதுதல் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை காசி மடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் தொடங்கி வைத்தார்.
முன்னதாக மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் ஏகாம்பரம் தலைமையில் தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கும், அம்பாளுக்கும் பட்டுசாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் இரவு நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.
புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் பூஜையும் நடைபெறுகிறது. அதையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப் பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து சித்சபை பிரவேசம் செய்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய பொது தீட்சிதர்களின் செயலாளர் ரா.சி.வைத்திலிங்க தீட்சிதர், துணைச் செயலாளர் எஸ்.யு.ஐயப்ப தீட்சிதர் மற்றும் அறநிலையத் துறை செயல் அலுவலர் க.சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். சிதம்பரம் டிஎஸ்பி ச.சிவனேசன் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ச.கார்த்திகேயன் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான் செய்திருந்தார். குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியா பேகம், ஆணையர் (பொறுப்பு) பெ.மாரியப்பன் ஆகியோர் செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக