உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

சம்பா சாகுபடி: கூடுதல் தண்ணீருக்கு காத்திருக்கும் டெல்டா விவசாயிகள்

வீராணம் ஏரியின் தோற்றம் (கோப்பு படம்).

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகளை முன்னரே தொடங்க வசதியாக, கொள்ளிடம் கீழணைக்கு கூடுதலாக காவிரி நீரைத் திறக்க வேண்டும் என்று  கோரிக்கை எழுந்துள்ளது.

           காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை 28-ம் தேதி, 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. உடனேயே அது 4 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட நீரால் காவிரிக் கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கே பயன்பட்டது.

         கல்லணைக்கு வரும் 4 ஆயிரம் கனஅடி நீரில், கடலூர், நாகை மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்கு, 10 சதவீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற அடிப்படையில், 400 கன அடி மட்டுமே கொள்ளிடம் கீழணைக்குத் திறக்கப்பட்டது. இதனால் 9 அடி உயரம் கொண்ட கொள்ளிடம் கீழணையில், 5.6 அடி உயரத்துக்கே நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

           இந்த நிலையில் கொள்ளிடம் கீழணையில் இருந்து புதன்கிழமை பாசனத்துக்கு 550 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால், தெற்குராஜன் வாய்க்கால், குமிக்கு மண்ணியாறு உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் திறந்த சில மணி நேரத்திலேயே, வடவாறு தவிர ஏனைய வாய்க்கால்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. வடவாறில் தற்போது 550 கனஅடி நீர் முழுவதும் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் வியாழக்கிழமை பகல் 12 மணி வரை அந்த நீர் வீராணத்தைச் சென்றடையவில்லை. மேட்டூர் அணையில் காவிரிநீர் இருப்பு குறைவாக இருப்பினும், கடலூர் மாவட்டம் தவிர, ஏனைய டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் இன்னமும் முடிவடையாமல் இருப்பதே, மேட்டூர் அணையில் இருந்து, பாசனத்துக்கு குறைவான நீர், திறப்பதற்குக் காரணம் என்று, பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

             வீராணம் ஏரியில் வியாழக்கிழமை நீர் மட்டம் 41.1 அடியாக இருந்தது. வீராணத்தில் நீர் மட்டம் 42 அடியாக உயர்ந்தால் மட்டுமே, சென்னைக்கு முழு அளவான 77 கனஅடி நீர் அனுப்ப முடியும். தற்போது நீர் மட்டம் குறைவாக இருப்பதால், 3 மோட்டார்கள் மட்டும் இயக்கப்பட்டு 55 கனஅடி நீர் மட்டுமே அனுப்பப்படுகிறது. வடவாறில் 1,000 கனஅடியாவது திறந்தால்தான், வீராணத்தின் நீர் மட்டத்தை ஒரு வாரத்தில் 42 அடிக்கு உயர்த்த முடியும், அதன்பிறகே சென்னைக்கு 77 கனஅடி நீர் அனுப்ப முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

           கடந்தஆண்டு காலம் கடந்து காவிரி நீர் திறக்கப்பட்டதால், கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் உளுந்து பயிரிட முடியாமல் போயிற்று. இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ. 80 கோடிக்கு மேல். தமிழகத்தில் உளுந்து விலையும் அதிகரித்தது. அதனால்தான் சம்பா விவசாயத்தை முன்னரே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறிவருகிறோம்.  கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துவிட்டதால் சம்பா சாகுபடியை முன்னரே தொடங்க விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள்.  கடலூர் மாவட்டத்தில் விவசாயப் பணிகளைத் தொடங்கவும், வீராணம் நீர் மட்டத்தை உயர்த்தவும் வசதியாக, கொள்ளிடம் கீழணைக்கு கல்லணையில் இருந்து உடனே கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து கொள்ளிடம் கீழணை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செல்வராஜ் கூறுகையில், 

                கீழணையில் இருந்து திறக்கப்படும் 550 கனஅடி நீர் முழுவதும், வடவாறில் விடப்பட்டு உள்ளது. எனினும் இந்த அளவு நீரைக் கொண்டு வீராணம் ஏரி 42 அடியை எட்ட காலதாமதம் ஆகும். கல்லணையில் கூடுதல் நீர் திறந்தால், பாசனத்துக்கும், சென்னைக் குடிநீருக்கும் கூடுதல் நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior