உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 10, 2011

துணை முதல்வர் ஸ்டாலின் 13-ல் கடலூர் வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

கடலூர்:

            துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 13-ம் தேதி, கடலூர் வருவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  

            13-ம் தேதி மாலை 4 மணிக்கு, மு.க. ஸ்டாலின் கடலூர் வருகிறார். அவரது வருகைக்கான அரசு விழா, கடலூர் அருகே கேப்பர் மலையில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது.  விழாவுக்கு வரும் மு.க. ஸ்டாலின், ராமாபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள பெரியார் சமத்துவபுரத்தைத் திறந்து வைக்கிறார். பின்னர் நடைபெறும் விழாவில் 3 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குகிறார். கடலூர் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவற்றை விழாவில் திறந்து வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.  

               ஸ்டாலின் வருகைக்காக கடலூரில், கேட்பாரற்று தூசி படிந்து கிடந்த பாலங்கள், சாலைகள் இரவு பகலாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன. புதிய வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது. கேப்பர் மலை செல்லும் வண்டிப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் பிரதிபலிப்பான்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.  மாநில நெடுஞ்சாலையாக இருந்த போதிலும் ஆக்கிரமிப்புகள் காரணமாக இச்சாலை, ஊராட்சி சாலைகளை விட குறுகலாகி விட்டது.  துணை முதல்வர் வருகையை முன்னிட்டாவது, சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? என்று தெரியவில்லை.  

               ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் இச்சாலையில் 13-ம் தேதியன்று, குறிப்பாக இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதில், பெருத்த சிரமம் ஏற்படும் என்று கடலூர் மக்கள் கூறுகிறார்கள்.  விழாவுக்காக அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.  பந்தல் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். கூடுதல் ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior