உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 10, 2011

கடலூர் மாவட்டத்தில் 2010-11- ம் ஆண்டில் ஊரக வளர்ச்சித் துறையில் ரூ.154 கோடியில் பணிகள் நிறைவு: கே.எஸ். அழகிரி எம்.பி

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில், 2010-11-ம் ஆண்டில் ரூ.154 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று இருப்பதாக, மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் கே.எஸ். அழகிரி எம்.பி. செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.  

            கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், மத்திய மாநில அரசுகளால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், கடலூரில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்தது.  

கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி எம்.பி. பேசியது: 

            மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில், இந்த ஆண்டுக்கு ரூ.117.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.107 கோடி செலவில் 87 சதவீதம் பணிகள் நடைபெற்று உள்ளன.   இந்திரா நினைவு குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில் ரூ. 19 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ. 18.76 கோடிக்கான பணிகள் (99 சதவீதம்) முடிந்து உள்ளன.  பொன்விழா கிராம சுயவேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ. 5.76 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.4.65 கோடிக்கான 87 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.  

            பிரதமரின் கிராமச்சாலைகள் திட்டத்துக்கு ரூ.8.73 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.7.09 கோடிக்கான பணிகள் முடிவடைந்து உள்ளன.  ÷ஊரக குடிநீர் திட்டத்துக்கு ரூ.6.65 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.4.35 கோடிக்கான பணிகள் முடிவடைந்து உள்ளன.  முழு ஊரக சுகாதாரத் திட்டத்துக்கு ரூ.5.96 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.73 கோடிக்கான பணிகள் (26 சதவீதம்) நடந்துள்ளன. விதவை ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் உதவித் திட்டத்தில் 47,588 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு உள்ளது என்றார் கே.எஸ். அழகிரி.  

             கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், கூடுதல் ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், மற்றும் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior