சிதம்பரம் :
விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் ரயில் ஓடத் துவங்கி எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லாமல் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி முதல் ரயில் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இன்று வரை கழிப்பிட வசதி செய்து தரப்படாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. ரயில் நிலையத்தில் ஆண்களுக்கு, பெண்களுக்கென தனித்தனி கழிப்பிடம் கட்டி ஆறு மாதம் ஆகிறது. தனியாரிடம் டெண்டர் விட்டும் யாரும் எடுக்க முன்வரவில்லை என ரயில்வே நிர்வாகம் காரணம் கூறுகிறது. இதனால் பயணிகள் உபயோகத்திற்கு திறந்து விடப்படாமல் பூட்டிக் கிடக்கிறது. கடந்த மாதம் ரயில் பாதையை பார்வையிட வந்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் விரைவில் கழிப்பிடத்தை திறந்துவிட உத்தரவிட்டார். இருந்தும் இன்று வரை பூட்டிக் கிடக்கிறது.
அத்துடன் ரயில் நிலையத்தில் பயணிகள் ஒய்வெடுப்பதற்கு ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி அறை உள்ளது. ரயில்வே நிர்வாகம் பராமரிப்பில் அந்த அறைகளும் பூட்டியே உள்ளன. பயணிகள் அவதியை கருத்தில் கொண்டு விரைவில் கழிப்பிடத்தை திறந்துவிடுவதுடன், ஓய்வு அறையையும் திறந்துவிட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக