உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 10, 2011

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர் : 

         கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது'' என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

               துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 13ம் தேதி மாலை கடலூர் அடுத்த ராமாபுரத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தை திறந்த வைக்கிறார். பின்னர் எம்.புதூரில் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு துறைகளுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்த வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார். இவ்விழாவிற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. 

              நேற்று முன்தினம் மாலை அமைச்சர் பன்னீர்செல்வம், விழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரவு 9 மணிக்கு எம்.புதூரில் அமைக்கப்படும் மேடை மற்றும் பந்தல் பணியை பார்வையிட்டு ஆலோசனை வழங்கி விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

பின்னர்அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியது: 

            பட்ஜெட்டில், கடலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட தலா 100 கோடி ரூபாய் வீதம் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வரும் 13ம் தேதி மாலை 4 மணிக்கு துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். டெண்டர் விடப்பட்டு 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிக்கு அருகிலேயே மாவட்ட பெருந்திட்ட வளாகம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 20 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

             பேட்டியின் போது கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.டி.ஏ., திட்ட அலுவலர் வீரராகவராவ், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மனோகர், டி.எஸ்.பி., பாண்டியன், சேர்மன் தங்கராசு, ஒன்றிய செயலர் ஜெயபால், ராமாபுரம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior