உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 10, 2011

கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஆட்சியர் தொடங்கினார்

கடலூர்:

         கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.  

          மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியாளர்களிடம், புதன்கிழமை தனது குடும்ப விவரங்களைத் தெரிவித்து, மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.  

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியது:  

               மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் பற்றி, மார்ச் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மறுபரிசீலனை செய்யப்படும். மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு, 3 முறை பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.  2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கடலூர் மாவட்ட மக்கள் தொகை 22,895,395 ஆக இருந்தது. தற்போது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை கடலூர் மாவட்டத்தில் 4,334 தொகுப்புகளாகப் பிரித்து, 4,037 பணியாளர்களும், 659 கண்காணிப்பாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். 

           மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான படிவத்தில் 29 கேள்விகளுக்கான வரிசைகள் இருக்கும். ஆண், பெண், திருநங்கை ஆகியோருக்கான வரிசைகளும் இடம்பெற்று உள்ளன. 28-ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை, மன நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தெருவோரம் வசிப்போர், வீடற்றவர்கள் பற்றி, கணக்கெடுக்கும் பணி ஒரே நேரத்தில் நடைபெறும் என்றார் ஆட்சியர்.  மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், கடலூர் நகராட்சி ஆணையர் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.  

சிதம்பரத்தில்... 

              சிதம்பரம் தாலுக்காவில் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர்.மங்கையர்கரசி வீட்டில் கணக்கெடுப்பு பணியை கோட்டாட்சியர் எம்.இந்துமதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஜே.ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் என்.ராஜமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

                   சிதம்பரம் நகராட்சி பகுதியில் நகர்மன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் வீட்டில் ஆணையாளர் (பொறுப்பு) பெ.மாரியப்பன் தொடங்கி வைத்தார். 

 பண்ருட்டியில்...  

            பண்ருட்டி நகர பகுதியில் முதலாவதாக பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் வீட்டில் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. பின்னர் நகர்மன்றத் துணைத் தலைவர் கே.கோதண்டபாணி வீட்டில் கணக்கெடுக்கப்பட்டது.  மக்கள் தொகை கணக்கெடுக்கும் பொறுப்பாளர்கள் முகமதுஉமர், தயாளன் ஆகியோர் விவரங்களை கேட்டறிந்து பதிவு செய்தனர். இந்நிகழ்வின்போது நகராட்சி ஆணையர் சு.அருணாசலம் உள்ளிட்ட பலர் இருந்தனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior