உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 07, 2011

கடலூர் பகுதியில் கேந்திப் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பு

கடலூர் அருகே சுபஉப்பளவாடி கிராமத்தில் பூத்துக் குலுங்கும் கேந்திப் பூக்களைப் பறிக்கும் பெண்கள்.

கடலூர்:

             கடலூர் பகுதியில் கண்ணுக்கு அழகாக பார்வையாளர்களை கவரும் கேந்திப் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. 



                       ஆனால் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சியோ மலரவில்லை.  பெரும்பாலும் ஜனவரி மாதத்தில் கேந்திப் பூ விதைக்கப்படுகின்றன. மார்ச் மாதத்தில் பெருமளவுக்கு கேந்திப் பூக்கள் அறுவடைக்கு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு கேந்தி பயிரிட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை லாபம் கிடைத்ததாக கேந்தி பயிரிட்ட விவசாயிகள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  


                இதனால் கடலூர் மாவட்டத்தில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான விவசாயிகள் கேந்தி பயிரிட்டனர். சுமார் 250 ஏக்கரில் இந்தாண்டு கேந்திப் பூ செடிகள் பயிரிடப்பட்டு இருப்பதாக வேளாண் துறை தெரிவிக்கிறது. கடலூரை அடுத்த கிராமங்களில் தோட்டங்களில் கேந்திப் பூக்கள் திரட்சியாகவும், அதிக எண்ணிக்கையிலும் பூத்துக் குலுங்கி இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் கண்கொள்ளாக் காட்சி. ஆனால் அவற்றைப் பயிரிட்ட விவசாயிகளுக்கு அவைகள் மகிழ்ச்சி ஏற்படுத்தவில்லை.


              தற்போது கடலூரில் கேந்திப் பூக்களை, வியாபாரிகள் கிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். இதுவே கடந்த ஆண்டு விலை ரூ.40 வரை.  இந்தாண்டு அதிக விவசாயிகள் கேந்திப் பூ செடிகளைப் பயிரிட்டதாலும், வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் கேந்திப் பூ வரத்து அதிகரித்ததாலும், கடலூர் மாவட்ட கேந்தி விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்கிறார்கள். இதனால் தோட்டங்களில் கேந்திப் பூக்கள் பறிக்கப்படாமல் அழுகிக் கொண்டிருப்பதாகவும், விவசாயிகள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.  


இதுகுறித்து கடலூர் சுபஉப்பளவாடி விவசாயி பாக்கியராஜ் அண்மையில் கூறியது: 


                 கடலூர் சுபஉப்பளவாடி, நாணமேடு, பண்ருட்டி வட்டம் மளிகைமேடு, தட்டாம்பாளையம், கட்டமுத்துப்பாளையம், முட்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு கேந்தி பயிரிடப்பட்டது. கடந்த ஆண்டு கேந்தியில் நல்ல லாபம் கிடைத்தால் பல விவசாயிகள் கேந்தி பயிரிட்டனர்.  ஏக்கருக்கு கேந்தி விதை விலை ரூ.10 ஆயிரம். வேளாண் செலவு ரூ.10 ஆயிரம். கடந்த ஆண்டு கேந்தி விவசாயத்தில் எனக்கு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் கிடைத்தது. ஆனால் இந்தாண்டு செலவு செய்த பணமாவது கிடைக்குமா என்பது சந்தேகம். தற்போது கிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை பூ வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். 


           பொதுவாக இந்த மாதங்களில் ஓசூர், திருவண்ணாமலை, சத்தியமங்கலம் போன்ற மாவட்டங்களில் இருந்து, கடலூருக்குக் கேந்திப் பூ வரத்து இருக்காது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இவ்வாண்டு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் இருந்தும், கடலூருக்கு கேந்திப் பூ வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் உள்ளூர் கேந்திப் பூக்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டனர் என்றார் பாக்யராஜ்.  


இதுகுறித்து கடலூர் வேளாண் அலுவலர் ஒருவர் கூறுகையில்,



              இதுதான் நமது விவசாயிகளின் பரிதாப நிலை. கடந்த ஆண்டு குறிப்பிட்ட பயிருக்கு நல்ல விலை கிடைத்தது என்றால், பல விவசாயிகள் அடுத்த ஆண்டில் அப் பயிரை விவசாயம் செய்கிறார்கள். ஆனால் உற்பத்தி அதிகரிப்பு, வெளியூர்களில் இருந்தும் வரத்து போன்ற காரணங்களால், செலவிட்ட தொகைக் கூட கிடைப்பதில்லை. அந்த நிலைதான் கேந்திப் பூவுக்கும் ஏற்பட்டுள்ளது. பூவை பதப்படுத்தி வைக்கவும் வாய்ப்பு இல்லை.  விதைக்கும் காலத்திலேயே, அறுவடை காலத்தின் நிலையை அறிந்து கொள்ள முடிவதில்லை. 



                ஆந்திரம், பெங்களூரில் இருந்து வரும் கேந்திப்பூக்கள், கடலூரில் கிலோ ரூ.7 க்குக் கிடைக்கிறது என்றால், அந்த மாநில விவசாயிகளுக்கு கிலோ ரூ.1 அல்லது ரூ. 2 தான் கிடைத்திருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இதில் வியாபாரிகளுக்கு  கிடைக்கும் லாபம்தான் நிரந்தரமாக இருக்கிறது. அரசு நினைத்தால் இப் பிரச்னைகளில் ஓரளவுக்கு மாற்றம் கொண்டு வரமுடியும் என்றார். 


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior