வீராணம் ஏரி பாசனத்தின் மூலம் விவசாயத்தையே நம்பி வாழும் அதிக மக்கள் கொண்ட தொகுதி காட்டுமன்னார்கோவில்.
இத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளரும், பேச்சாற்றல் மிக்கவரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான துரை.ரவிக்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அரசு பணியில் இருக்கும் உள்ளூர் வேட்பாளரான அதிமுக வேட்பாளர் நாக.முருகுமாறனுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. தமிழக முதல்வரிடம் துரை.ரவிக்குமார் நெருக்கமாக இருந்த காரணத்தால் 5 ஆண்டுகளில் தொகுதிக்கு பல நூறு கோடி மதிப்பிலான பல்வேறு நல திட்டப் பணிகள் கொண்டு வந்தாலும் மக்களை சந்திக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
கட்சியினரை சந்திக்கவில்லை என்ற அதிருப்தியுடன் தேர்தல் களத்தில் இறங்கி அதை தற்போது சரிசெய்து தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ரவிக்குமாருக்காக பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பிரசாரம் செய்துள்ளனர். துரை.ரவிக்குமார் மீதான அதிருப்தியை பயன்படுத்தியும், மக்களிடம் ஆட்சி மாற்றம் தேவை என்ற எண்ணத்தை கொண்டும் அதிமுக வேட்பாளர் நாக.முருகுமாறன் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருவதால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இத்தொகுதியில் ஆதிதிராவிடர் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மறைந்த சமுதாயத் தலைவர் எல். இளையபெருமாளின் மகன் மருத்துவர் எல்.இ.நந்தகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தனக்கு சீட் கொடுக்கப்படாததால் சுயேச்சையாக இத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பதை பொறுத்தே மற்ற இருவரில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக