கடலூர் :
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் அடங்கிய "சிடி'யை கல்வித்துறை நிர்வாகம் வழங்காததால், மாவட்டங்களில் தேர்வு முடிவுகள் அறிய காலதாமதமானது. கல்வித்துறை சார்பில், 10ம் வகுப்பு, மெட்ரிக் மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளி தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிடும். அதன் விவரங்கள், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும். அதன் அடிப்படையிலேயே மாவட்ட அளவில் முதலிடம், 100 சதவீத தேர்ச்சி விவரங்கள் கண்டறிந்து அறிவிக்கப்படும்.
கல்வித்துறை முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதால் கடந்த மூன்றாண்டுகளாக தேர்வு முடிவு வெளியிடுவதற்கு முதல் நாள் மாலை தேர்வு முடிவு, "சிடி'க்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அன்று இரவே, தேர்வு முடிவுகள் குறித்த முழு விவரங்களை தயாரித்து, தேர்வு முடிவு அறிவிக்கும் நேரத்தில், பத்திரிகைகளுக்கு முழு விவரங்களும், வழங்கப்படும். கடந்த 9ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட்ட போதும், இதே முறை பின்பற்றப்பட்டது. ஆனால், நேற்று 10ம் வகுப்பு மற்றும் மெட்ரிக் தேர்வு முடிவு வெளியிடுவதில் இந்த முறையை பின்பற்றவில்லை.
தேர்வு முடிவு, "சிடி'க்கள் வழங்காமல், "கம்ப்யூட்டர் கோடிங் ஷீட்' மட்டுமே வழங்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதமானது. காலை 11.30 மணிக்குப் பிறகே தேர்ச்சி சதவீதம் தெரிந்தது. இதனால் மாணவ, மாணவியர், பெற்றோர் மட்டுமின்றி பத்திரிகை நிருபர்களும் அலைக்கழிக்கப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக