உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 28, 2011

கடலூரில் பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டும் வாகனங்கள்: நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறி

கடலூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உப்பனாற்றின் கரையில், செப்டிக் டாங்க் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டும் வாகனம்.

கடலூர்:

             கடலூரில் கண்ட இடங்களில் எல்லாம், செப்டிக் டாங்க் கழிவுகளைக் கொட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாக மாறிவருகிறது. 

              கடலூர் கட்டுப்பாடற்ற நகரமாக மாறிவருகிறது. வீடுகளுக்கு நகராட்சிக் குடிநீர் இணைப்புகளை நகராட்சி அனுமதியின்றி இரவோடு இரவாக, தாங்களே ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நகராட்சி உறுப்பினர்களின் மறைமுக ஆதரவு இதன் பின்னணியில் இருப்பதால், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறது. 

             இதனால் நகராட்சிக்குக் குடிநீர் வரி கிடைப்பது தடைபடுகிறது. நகரில் ஏராளமான திருமண மண்டபங்கள் உள்ளன. இவற்றில் மீதமாகும் உணவுப் பொருள்கள், இலைகள் உள்ளிட்ட குப்பைகள் மண்டபத்துக்கு அருகாமையில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் சாலையோரங்களில் எவ்வித பயமும் இன்றி கொட்டப்படுகின்றன. நகரைத் தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள் சேகரிக்கும் குப்பைகளை வீதிகளில் ஆங்காங்கே கொட்டி எரிக்கிறார்கள். 

             கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளின் கரைகளில் கொட்டும் போக்கும் வேகமாகப் பரவி வருகிறது. பல கோடி செலவிட்டு கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டும், அவை ஒன்றுக்கொன்று சரியான மட்டத்தில் கட்டப்படாததால், தனித்தனி தொட்டிகளாக மாறி, சாக்கடை நீர் வெளியேற்றப்படாமல் தேங்கி, கொசு உற்பத்திக் கேந்திரங்களாக மாறிவிட்டன. அண்மைக் காலமாக இச் சுகாதாரக் கேடுகளின் வரிசையில் கைகோர்த்து நிற்பவர்கள், செப்டிக் டாங்க் சுத்தம் செய்யும் நபர்கள். அழகாக வர்ணம் தீட்டப்பட்டு, நிறுவனங்களின், உரிமையாளர்களின் பெயர்கள், தொடர்பு கொள்ள செல்போன் எண்கள் என பலத்த பந்தாவுடன் நகரில் வலம் வரும் செட்டிக் டாங்க் சுத்தம் செய்வோர், நகரின் சுகாதாரத்தை நடுத்தெருவில் நிறுத்தி வருகிறார்கள். 

              செப்டிக் டாங்குகளை சுத்தம் செய்ய ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கும் இவர்கள், கழிவுகளைக் கண்ட இடங்களில் எல்லாம் கொட்டி, மற்றவர்களின் சுகாதாரத்தைக் கெடுத்து வருகிறார்கள். கெடிலம், பெண்ணையாறு, தேசிய நெடுஞ்சாலையோரம் உப்பனாறு, கடலூர் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால், மஞ்சக்குப்பம் பிரபல தனியார் மேல்நிலைப் பள்ளிக்குப் பின்புறம் போன்ற இடங்களில் இரவு நேரங்களில் கழிவுகளைக் கொட்டிச் சென்று விடுகிறார்கள். 

             குடலைப் பிடுங்கும் துர்நாற்றத்துடன் விளங்கும் அப்பகுதி சுகாதாரம் பற்றி, யாருக்கும் கவலையற்ற போக்கு கடலூரில் நீடித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையோரம் பாதாளச் சாக்கடை கழிவு நீரகற்றும் நிலையம், சுடுகாடு, கரும காரியக் கொட்டகை உள்ள உப்பனாற்றங்கரைப் பகுதியை, சுகாதாரக் கேட்டின் மையமாக மாற்றி வருகின்றனர், செட்டிக் டேங்க் சுத்தம் செய்வோரும் ஹோட்டல் உரிமையாளர்களும். இவர்களைக் கேட்க நாதியற்ற நிலை, திறமையற்ற நகராட்சி நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. 

              கடந்த காலங்களில் இந்த நகராட்சியையே குப்பைத் தொட்டியாக மாற்றிய அதிகாரிகள் அகற்றப்பட்டு, நன்கு செயல்படும் அதிகாரிகள் பொறுப்பு ஏற்று இருக்கும் நிலையில், இத்தகைய புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் விரும்புகிறார்கள். 

இப் பிரச்னை குறித்து நகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியது 

              இத்தகைய புகார்கள் நகராட்சிக்கு நிறைய வருகின்றன. ஜூன் 5-ம் தேதி செப்டிக் டாங்க் வாகன உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க இருக்கிறேன். அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளா விட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கண்டிப்பாக, நகராட்சியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேறும்போது, செட்டிக் டாங்க் கழிவு பிரச்னை ஏற்படாது. 

             செப்டிக் டாங்க், மற்றும் சாக்கடை உள்ளிட்ட கழிவுகளைச் சுத்தம் செய்வோர், பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன். காப்பீடு செய்து இருக்க வேண்டும். விஷ வாயுக்களை கண்டறியும் கருவி நகராட்சியில் வாங்கப்பட்டு உள்ளது என்றார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior