உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 31, 2011

மீன் பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்றனர் கடலூர் மீனவர்கள்


மீன்களை கடலூர் துறைமுகத்தின் மீன் இறங்கு தளத்தில் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

  
கடலூர்:
 
           45 நாள் தடைகாலம் முடிந்து திங்கள்கிழமை கடலுக்குச் சென்ற கடலூர் மீனவர்கள், அதிக அளவில் மத்தி மீன்களைப் பிடித்து வந்தனர். 

             மீன்கள் அதிகம் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால், கடல் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், ஏப்ரல் 15-ம் தேதி முதல் 45 நாள்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்க ஆண்டு தோறும், தமிழக அரசால் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை காலத்தில் கடலூரில் மீன்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. வெளியூர்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டன. மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் வஞ்சரம் மீன் கிலோ ரூ. 500 வரை உயர்ந்தது. 

              கிலோ ரூ. 100 முதல் ரூ. 120 வரை விலை போகும் சங்கரா மீன்கள்கூட, கிலோ ரூ. 200 முதல் ரூ. 230 வரை விற்பனை செய்யப்பட்டன.இந்த ஆண்டு மீன்பிடித் தடைகாலம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணியுடன் முடிவடைந்ததால், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். 62 கி.மீ. நீள கடற்கரை உள்ள கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. மீன் பிடித் தடைக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து, மிகப்பெரிய விசைப் படகுகள் சுமார் 1,000 மற்றும் ஏராளமான சிறிய விசைப் படகுகளும் மீன்பிடிக்கச் சென்றன. 

மீன்கள் பிடிபட்டது குறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறியது: 

             மீன் பிடித் தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்ற பெரிய படகுகளில் 20 சதவீதமும், சாதாரணப் படகுகளில் 50 சதவீதமும் திங்கள்கிழமை கரை திரும்பின. கரை திரும்பிய படகுகளில் பெரும்பாலும் மத்தி மீன்கள் அதிகமாகக் காணப்பட்டன. ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் பெரிய விசைப் படகுகள் கரை திரும்பிய பிறகுதான், மீன்கள் எந்த அளவுக்குப் பிடிபட்டன என்ற விவரம் முழுமையாகத் தெரியவரும். சூறை, கவலை, கெந்தலு, சங்கரா ஆகிய மீன்கள், மிகக் குறைவாகக் கிடைத்தன. திங்கள்கிழமை கடல் காற்று கொஞ்சம் அதிகமாக இருந்தது. எனினும் அதனால் மீன்பிடித் தொழிலில் பாதிப்பு எதுவும் இல்லை.

             மத்தி மீன்கள் ஒரு பெட்டி (70 கிலோ) திங்கள்கிழமை ரூ. 400 முதல் ரூ. 500 வரை விலை போனது. அவை பெரும்பாலும் கேரள மாநிலத்துக்கு லாரிகளில் கொண்டு செல்லப் பட்டன. கேரள மாநிலத்தில் மீன் பிடித் தடைகாலம் இனிமேல்தான் தொடங்க உள்ளது. அதன் பிறகு கடலூரில் பிடிபடும் மத்தி மீன்களுக்கு, கேரளத்தில் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior