கடலூர்:
அரசு வழங்கும் இலவச பொருட்களை பெறுவதற்காக, ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை, தேர்தலுக்குப் பின் அதிகரித்து வருகிறது.
கடந்த தி.மு.க., அரசில் ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் "டிவி', காஸ், கான்கிரீட் வீடு கட்டும் திட்டம், இலவச நிலம் உள்ளிட்ட பல திட்டங்கள் அனைத்தும், ரேஷன் கார்டு அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டன. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் அரிசி இலவசம், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசம், தாலிக்கு தங்கம், பசுமை வீடு, ஆடு, மாடு என ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்த இலவச பொருட்களை விரைந்து வழங்குவதற்காக, அ.தி.மு.க., அரசு சார்பில், தனியாக ஒரு துறையே செயல்பட்டு வருகிறது. அரசு வழங்கும் இச்சலுகையை பெறுவதற்காக, பொதுமக்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஏற்கனவே தி.மு.க., ஆட்சியில் இருந்த இலவசங்களை விட, இந்த ஆட்சியில் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றை முழுமையாக பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு அடிப்படையாக உள்ள ரேஷன் கார்டு பெற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள், ஒரே ரேஷன் அட்டையை பயன்படுத்தி வந்தனர்.
அரசு வழங்கும் சலுகையை பெறுவதற்காக, கூட்டுக் குடும்பமாக உள்ளவர்கள் அவற்றை பிரித்து ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து வருகின்றனர். இதன் காரணமாக, வழக்கமாக மாதம் தோறும் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களை விட, தற்போது 25 சதவீத விண்ணப்பங்கள் கூடுதலாக வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக