உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சுனாமி குடியிருப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுனாமி குடியிருப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 03, 2011

கடலூர் மாவட்டத்தில் சுனாமி நிவாரணப் பணிகள்: வெளிநாட்டினர் ஆய்வு

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுனாமி நிவாரணப் பணிகளை, வெளிநாட்டுப் பிதிநிதிகள் திங்கள்கிழமை பார்வையிட்டனர். 

              தேசிய ஊரகப் பயிற்சி மையம் ஹைதராபாத்தில் உள்ளது. கஜகஸ்தான், நைஜீரியா, ஆப்பிரிக்கா, கியூபா, நமீபியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 45 நாள் பயிற்சிக்காக ஹைதராபாத் வந்துள்ளனர்.  அவர்கள் கள ஆய்வுக்காக திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்துக்கு வந்தனர். மதலப்பட்டு கிராமத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் நடத்தும் தோல்பொருள்கள் தயாரிப்பு நிலையம், தாழங்குடா சுனாமி குடியிருப்பு, பெரியப்பட்டு சுயஉதவிக் குழுவினர் நடத்தும் மீன் வலை தயாரிக்கும் நிலையம், சின்னக்குமட்டியில் சுயஉதவிக் குழுவினர் நடத்தும் சிமென்ட செங்கற்கள் தயாரிப்பு ஆலை, கிள்ளை, எம்.ஜி.ஆர். திட்டு பொது சுகாதார வளாகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். 

             பின்னர் கடலூரில் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லியைச் சந்தித்துப் பேசினர். கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுனாமி மறுவாழ்வுப் பணிகளை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.  தேசிய ஊரக பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கிருபா சங்கர் (மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டுத்துறை இணை இயக்குநர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








Read more »

செவ்வாய், ஜூன் 21, 2011

கடலூர் நகராட்சி சுனாமி குடியிருப்பில் வசிப்போருக்கு உள்ளாட்சி தேர்தலில் முறையாக வாக்களிக்க வாய்ப்பு

கடலூர்:

     தமிழ்நாட்டில் உள்ளாட்சி நிறுவனங்களில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கான  பதவிக் காலம், அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. 

          அக்டோபர் 25ல் புதிய நிர்வாகிகள் பதவியேற்க வேண்டும். கடலூர் நகராட்சிப் பகுதியில் சுனாமிக் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போருக்கு, அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே, உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடலூரில் 2004-ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவனாம்பட்டினத்தில் 600 வீடுகளும், ஏணிக்காரன் தோட்டத்தில் 1,300 வீடுகளும் பல்வேறு தொண்டு நிறுவனங்களால் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில் வசிக்கும் 1,900 குடும்பங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. 

          இவர்கள் கடந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டப் பேரவைத் தேர்தலிலும், சுனாமிக்கு முன்னர் எந்தெந்த கிராமங்களில் வசித்தார்களோ, அங்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டிய நிலை இருந்தது. இவர்களின் புதிய வசிப்பிடங்கள் சுனாமிக் குடியிருப்பாகவும், வாக்காளர் பட்டியல் முகவரிகள், சுனாமிக்கு முந்தைய கிராம வசிப்பிடங்களாகவும் உள்ளன  உள்ளாட்சித் தேர்தலிலும் இதேநிலை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடலூர் நகராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் என்பது, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின் நகலாகத்தான் இருக்கும் என்கிறார்கள் நகராட்சி அதிகாரிகள். 

       சட்டப் பேரவைத் தேர்தலின் போதே சுனாமிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்ற குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அவர்களின் பழைய கிராம முகவரி அடிப்படையில் தேடியபோது, அங்கு பலருக்கு வாக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுனாமிக் குடியிருப்பில் இருந்து அவர்களின் பழைய இருப்பிடங்கள் வெகு தொலைவில் இருந்ததால், வாக்களிக்க முடியவில்லை என்று பலர் தெரிவித்தனர். 

        இப்படியொரு இரட்டை நிலை இருப்பதால், பலரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுப் போகும் அவல நிலையும் ஏற்பட்டு உள்ளது.  இதனால் ஒரு வார்டில் உள்ள கவுன்சிலருக்கு வாக்களித்துவிட்டு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக, மற்றொரு வார்டு கவுன்சிலரை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என்றும், இதனால் அந்த மக்களுக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார் நகராட்சி உறுப்பினர் சர்தார்.   

        மேலும் ஏணிக்காரன் தோட்டம் சுனாமிக் குடியிருப்பு பகுதி வீடுகள் மூன்று வார்டுகளிலும், தேவனாம்பட்டினம் சுனாமிக் குடியிருப்புப் பகுதி வீடுகள் இரண்டு  வார்டுகளிலும் இடம் பெற்று உள்ளன. ஏணிக்காரன் தோட்டம் சுனாமிக் குடியிருப்பு பாதாளச் சாக்கடைத் திட்ட கழிவுநீர் அகற்று நிலையம் எந்த வார்டிலும் இடம்பெறவில்லை.இதனால் கழிவுநீர் அகற்றுதல், உப்பனாற்றில் பாலம் கட்டாததால்  சுடுகாட்டுக்காக, 5 கி.மீ. தூரம் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை, பள்ளிக் குழந்தைகள் 3 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட பல்லாண்டுகளாக தீர்க்கப்படாத பொதுப் பிரச்னைகளுக்காக எந்த நகராட்சி உறுப்பினரை நாடுவது எப்படி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது என்று தெரியவில்லை என்கிறார், மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன். 

இதுகுறித்து கடலூர் நகர குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில்,   

         கடலூரில் பல வார்டுகள் முறையாகப் பிரிக்கப்படவில்லை. காலப்போக்கில் பல வார்டுகளின் நிலை பெரிதும் மாறிவிட்டது. நீண்டகாலமாக வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படாமல் இருப்பதே இதற்குக் காரணம். வரஇருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே, வார்டுகளை மறு சீரமைப்பு செய்தால், மக்களின் பல்வேறு குறைகள் தீரும் என்றார். 




Read more »

வியாழன், ஜூன் 02, 2011

அடிப்படை வசதிகள் இன்றி சிதைந்துக் கிடக்கும் கடலூர் துறைமுகம்

கடலூர்:

             அடிப்படை வசதிகள் இன்றி சிதைந்துக் கிடக்கும் கடலூர் துறைமுக மீன் இறங்கு தளத்தைச் சீரமைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவர் பேரவை கோரிக்கை விடுத்தது.

              தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் திங்கள்கிழமை நடந்தது. ஆண்டுதோறும் கடல் நீரோட்டங்களால் தூர்ந்து கொண்டு இருக்கும் கடலூர் துறைமுகத்தை, மணல்வாரி கப்பல்கள் மூலம் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் மீன் வர்த்தகம் நடைபெறும் கடலூர் துறைமுக மீன் இறங்குதளம், பராமரிப்பு இன்றிக் கிடக்கிறது.


             மீன் இறங்கு தளத்தைச் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் துறைமுக நுழைவாயிலில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். பரங்கிப்பேட்டை, அன்னங்கோயில் துறைமுகங்களையும் ஆழப்படுத்த வேண்டும். சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி சுனாமி நகர் பகுதிகளில் இருந்து சுடுகாட்டுக்கு 6 கி.மீ. தூரம், சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியது இருப்பதால், பல சமூகப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. பல நேரங்களில் படகுகள் மூலமாகவும் சடலங்கள் எடுத்துச் செல்ல நேரிடுகிறது. 

               இப்பிரச்னைக்குத் தீர்வு காண, சுனாமி குடியிருப்புப் பகுதியில் உப்பனாற்றில் பாலம் அமைக்க வேண்டும். சுனாமிக் குடியிருப்புப் பகுதியில் இருந்து மாணவர்கள் சிரமமின்றி பள்ளிகளுக்குச் செல்ல, உப்பனாற்றில் சிறிய பாலம் அமைக்க வேண்டும். முழுமைப் பெறாமல் இருக்கும் சொத்திக்குப்பம்- கிள்ளை கடற்கரைச் சாலைப்பணியை நிறைவேற்ற வேண்டும்.÷தூர்ந்துக் கிடக்கும் கடலூர் துறைமுகம் கோரிவாய்க்காலை படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக ஆழப்படுத்த வேண்டும்.

              தியாகவல்லி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.சுப்புராயன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.




Read more »

வெள்ளி, ஏப்ரல் 08, 2011

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டம்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்

கடலூர் முதுநகர் ஏணிக்காரன் தோட்டம் சுனாமி குடியிருப்புப் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை.


கடலூர்:

           கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான குடியிருப்பில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம், படுதோல்வியில் முடிந்துள்ளது. இதனால் 1,000 குடும்பங்கள் அன்றாடம் தாங்க முடியாத சங்கடங்களை அனுபவிக்க நேரிட்டுள்ளது.  

             கடலூர் தேவனாம்பட்டினம், ஏணிக்காரன் தோட்டம் ஆகிய பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. தேவனாம்பட்டினம் பகுதியில் 400 வீடுகளும் ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் 650 வீடுகளும் கட்டப்பட்டு உள்ளன.  இவற்றுக்கு தனித்தனியே பாதாள சாக்கடைத் திட்டம், சுனாமி மறுவாழ்வுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் அடிக்கடி குழாய்களில் அடைப்பு ஏற்படுவதும், கழிவு நீரை வெளியேற்ற முடியாத நிலையும் ஏற்படுகிறது.  

              ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் 650 வீடுகளுக்கு போடப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தில், அனைத்து வீடுகளிலும் சேகரிக்கப்படும் (கழிவறைக் கழிவுகள் உள்பட) கழிவுகள் செயற்கைக் குளத்தில் தேக்கி வைக்கப்பட்டு, அதில் வழிந்தோடும் நீர் உப்பனாற்றில் கலக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது முறையாக செயல்படவில்லை. அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும் சுகாதாரக் கேடும் அதிகரித்தது.  

             பின்னர் கழிவுநீரை குளத்தில் தேக்கி வைக்காமல் உப்பனாற்றில் நேரடியாகக் கலக்கச் செய்தனர். தற்போது அதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேறாமலும், சாலைகளில் போடப்பட்டு உள்ள சேகரிப்புத் தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டு, வீதிகள் எங்கும் சாக்கடை பெருக்கெடுத்து ஓடும் நிலையும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது.  இதனால் இப்பகுதி மக்கள் அனுதினமும் அசுத்தத்தின் மத்தியில் வாழ வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். தற்போது தேர்தல் காலம் என்பதால் இந்த மோசமான நிலையை நகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி உறுப்பினர்களிடம் எடுத்துச் சொல்லியும் பயன் இல்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள். 

              தேர்தல் நடத்தை விதிகளின் படி, இத்தகைய பிரச்னைகளில் நகராட்சி உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க முடியாது, அவர்கள் நகராட்சி அலுவலகத்துக்கே போக முடியாத சூழ்நிலை உள்ளது. இதையெல்லாம் உடனடியாக எடுத்துச் சரிசெய்ய முடியாது என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்து விட்டதாகவும் சுனாமி நகரில் வசிக்கும் அய்யனாரப்பன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.  

             தேவனாம்பட்டினம், ஏணிக்காரன் தோட்டம் ஆகிய பகுதிகளில் போடப்பட்டு இருக்கும் பாதாளச் சாக்கடைத் திட்டம், மோசமாகச் செயல்படுவதை எண்ணிப் பார்த்து, கடலூர் நகர மக்கள், 33 வார்டுகளில் சுமார் ரூ. 80 கோடியில் நிறைவேற்றப்பட்டு வரும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தைப் பார்த்து தங்களுக்கும் இந்த நிலைதானே ஏற்படும் என்று, பெரிதும் அவநம்பிக்கையும் அச்சமும் அடைந்து வருகிறார்கள்.  

Read more »

வியாழன், டிசம்பர் 02, 2010

தேவனாம்பட்டினம் சில்வர் பீச் புறக்காவல் நிலையம் அழகுப்படுத்தும் பணி

கடலூர் : 

            தேவனாம்பட்டினம் சில்வர் பீச் புறக்காவல் நிலையம் அழகுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் வளாகத்தில் புறக்காவல் நிலையம் இயங்கி வந்தது. 

                  கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின் போது, இந்த புறக்காவல் நிலையம் முற்றிலுமாக சேதமடைந்தது. பின், அதே இடத்தில் புறக்காவல் நிலையம் புதியதாக அமைக்கும் பணி முடிவடைந்து, மீண்டும் செயல்படத் துவங்கின. இதையடுத்து புறக்காவல் நிலையத்தை அழகுப்படுத்த எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் முயற்சி மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக காவல் நிலைய வளாகத்தில் புற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், நுழைவு வாயிலில் இரண்டு பீரங்கிகள் அமைக்கப்பட்டு, அழகுப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Read more »

செவ்வாய், ஜூன் 29, 2010

கடலூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:
 
              கடலூரில் மீனவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பது,​​ கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட சுனாமி வீடுகள் கட்டுமானத்தில் நடந்துள்ள முறைகேடுகளைச் சுட்டிக் காட்டியும் நடவடிக்கை எடுக்காதது,​​ ​ சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் மீனவர்களின் வீடுகளைக் காலி செய்ய வற்புறுத்துவது,​​ சுனாமி பாதித்த சில பகுதி மக்களுக்கு இன்னமும் வீடுகள் கட்டிக் கொடுக்காதது ஆகியவற்றைக் கண்டித்தும்,​​ மாவட்டம் முழுவதும் கட்டப்பட்ட வரும் சுனாமி வீடுகளின் தரத்தைக் ஆய்வுசெய்ய வேண்டும்,​​ கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
               மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது.​ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ​ ​ மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆ.ஜெயராமன் தலைமை தாங்கினார்.மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கங்காதரன் வரவேற்றார்.​ மீனவர் பாதுகாப்பு பேரியக்க மாநில பொதுச் செயலர் செல்வ.ஏழுமலை,​​ குடிமக்கள் இயக்க பொறுப்பாளர்கள் தேவராஜ்,​​ ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வடக்கு மண்டல ஆலோசகர் பி.ஜே.அமலதாஸ்,​​ ​ தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.நிஜாமுதீன்,​​ பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ்,​​ தமிழ்தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலர் திருமார்பன்,​​ நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசகர் கவிஞர் பால்கி,​​ வழக்கறிஞர் கோ.மன்றவாணன்,​​ வெண்புறா பேரவைத் தலைவர் சி.குமார்,​​ தமிழர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பரிதிவாணன் உள்ளிட்ட பலர் பேசினர்.​ ஆர்.சந்திரன் நன்றி கூறினார்.

Read more »

செவ்வாய், மே 04, 2010

பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் நாளை திறப்பு விழா: 2 அமைச்சர்கள் பங்கேற்பு

 பரங்கிப்பேட்டை: 

             பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள 168 வீடுகளை நாளை 5ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார். பரங்கிப்பேட்டை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ராஜிவ்காந்தி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கொடிமரத்தெரு, ஆற் றங்கரை தெரு, மானம் பாடி உள்ளிட்ட பகுதிகளில் 6 கோடியே 20 லட் சத்து 56 ஆயிரம் மதிப் பில் 168 புதிய வீடுகள் கட்டப் பட்டது. இந்த புதிய வீடுகள் திறப்பு விழா நாளை 5ம் தேதி மாலை நடக்கிறது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்குகிறார். சேர்மன் முத்து பெருமாள் முன்னிலை வகிக்கிறார். பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் வரவேற்கிறார். புதிய வீடுகளை குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதி கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் தங்கவேலன் திறந்து வைக்கிறார். அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்குகிறார்.  விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், திட்ட இயக்குநர் ராஜஸ்ரீ, கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சடையப்பன், துணை சேர்மன் செழியன், செயல் அலுவலர் ஜீஜாபாய் பங்கேற்கின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திங்கள், ஏப்ரல் 26, 2010

சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் : 138 பயனாளிகளிடம் ஒப்படைப்பு


கிள்ளை : 

           சிதம்பரம் அடுத்த கிள்ளை எடப்பாளையம் மற்றும் நெடுஞ்சியில் காசா தொண்டு நிறுவனம் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட 138 பயனாளிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் செலவில் 4 கோடியே 14 லட்சம் செலவில் கட்டப்பட்ட வீடுகள் திறப்பு விழா நடந்தது.
 
               சிதம்பரம் அடுத்த கிள்ளை எடப்பாளையத்தில் சுனாமியால் பாதிக் கப்பட்டவர்களுக்கு காசா தொண்டு நிறுவனம் சார்பில்  தலா 3 லட்சம் செலவில் 93 கான்கிரீட் வீடுகள்  2 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்டது. காசா ஒருங்கிணைப் பாளர் ராஜ்குமார் வரவேற்றார். முதன்மை அலுவலர் ஷீலா ஜோன்ஸ்,  நிர் வாக இயக்குனர் சுசன்அகர்வால், நிர்வாக அலுவலர் நிர்மலா சிங் ஆகியோர் புதிய வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவி மற்றும் இன்சூரன்ஸ் பத்திரங்களை வழங்கினர். சிதம்பரம் தாசில்தார் காமராஜ், தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வில்சன் தன்ராஜ், கிள்ளை தர்கா முத்தவல்வி வஜ்ஜூன் சத்தாரி, பரங்கிப்பேட்டை ஏ.ஏல்.சி., போதகர் சாக்ரட்டீஸ் மற்றும் கிள்ளை எடப்பாளையம் கிராம மக்கள் பங்கேற்றனர். 

                     முன்னதாக நஞ்சைமகத்துவாழ்க்கை ஊராட்சி நெடுஞ்சியில் 45பயனாளிகளுக்கு ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகளை திறந்து வைத்து அதற்கான சாவிகளை பரங்கிப்பேட்டை சேர்மன் முத்து பெருமாள், ஊராட்சித் தலைவர் தனசேகரன் முன்னிலையில் வழங்கப்பட்டது. காசா நிறுவன இன்ஜினியர் ஜஸ்வா நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

செவ்வாய், மார்ச் 30, 2010

சுனாமி வீடு கட்ட போலி ஆவணங்கள் தாக்கல்: மோசடி கான்ட்ராக்டர் சிறையில் அடைப்பு

கடலூர் : 

                     சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற போலி வைப்பு நிதி ஆவணங்களை தாக்கல் செய்து அரசை ஏமாற்றிய மோசடி கான்ட்ராக்டரை போலீசார் கைது செய்தனர்.

               கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பெரியக்குப்பம் கிராமத்தில் சுனாமியால் பாதித்த மீனவர்களுக்கு அரசு சார்பில் ராஜிவ் காந்தி மறு புனரமைப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுப்பதற்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மூலம் கடந்த 2007ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் எடுப்பவர்கள் வைப்பு தொகையாக 5 லட்சம் ரூபாயும், கூடுதல் வைப்புத் தொகையாக 5 லட்சம் ரூபாயிற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அறிவுருத்தப்பட்டது. இந்த டெண்டரை எடுத்து, கடலூர் செம்மண்டலம் சிட்கோ தொழிற் பேட்டையில் 'ஐ டெக் இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன்' நடத்தி வரும் கோண்டூர் ஜோதி நகர் சந்தானம் மகன் ராஜன் (29) என்பவர் 125 வீடுகள் கட்டி வருகிறார்.

                     இந்நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் டெண்டரில் பெறப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதில் ராஜன் கொடுத்த வைப்பு தொகைக்கான ஆவணங்கள் போலியானவை என்பதும், போலி ஆவணங்களை கொடுத்து அரசை ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி திட்ட ஒலுவலர் சீனுவாசன் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, குணசேகரன் ஆகியோர் வழக்குப் பதிந்து, போலி ஆவணங்களை கொடுத்து அரசை ஏமாற்றிய ராஜனை நேற்று மாலை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more »

வெள்ளி, மார்ச் 12, 2010

சுனாமி குடியிருப்பு : ஆர்.டி.ஓ., விசாரணை

பரங்கிப்பேட்டை: 

               பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதித்தவர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தராதது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடத்துகிறார். சுனாமியில் பாதித்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் குடியிருப்புகள் கட்டிக் கொடுத்தனர். ஆனால் சுனாமியில் முழுமையாக பாதித்த பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்கு தெரு பகுதி மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்படவில்லை. இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணை சேர்மன் செழியன், முதல்வருக்கு மனு அனுப்பி இருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வரின் தனிபிரிவில் இருந்து சிதம்பரம் ஆர்.டி.ஓ., விசாரணை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ., மற்றும்  துணை சேர்மன் செழியன் ஆகியோரிடம் விசாரணை நடத்த தபால் அனுப்பட்டுள்ளது.

Read more »

திங்கள், மார்ச் 08, 2010

சுனாமி குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டு விழா

கடலூர்:

                கடலூர் செல்லங்குப்பத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சுனாமி குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் 1,678 சுனாமி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டு அதில் பரங்கிப்பேட்டையில் 168ம், பனங்காட்டு காலனியில் 74ம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.

                செல்லங்குப்பத்தில் 219 வீடுகள் முடியும் தருவாயிலும், கிள்ளை, முடசல் ஓடை பகுதிகளில் 103 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.  இது தவிர செல்லங்குப்பம் பகுதியில் 355 வீடுகளும் மற்றும் பனங்காட்டு காலனியில் 45 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா செல்லங்குப்பத்தில் நடந்தது.இதன் மூலம் சோனங் குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, மோகன் சிங் வீதி, ஆற்றங்கரை வீதி பகுதி மக்கள் பயனடைவர்.
                 நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் தமிழரசன், தங்கமணி, நித்யானந்தம், கோமதி, குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் சையத் சுலைமான் சேட், உதவி நிர்வாக பொறியாளர் ஸ்ரீதர், உதவி பொறியாளர்கள் ஜெயக்குமார், சுகுமார், இளநிலை பொறியாளர் மதிமாறன், பிளஸ் தொண்டு நிறுவன குழு தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

வியாழன், மார்ச் 04, 2010

உற்பத்தி அதிகரிப்பால் செங்கல் விலை குறைந்தது! சூளை பணியாளர்களுக்கு கூலி கிடு, கிடு


பண்ருட்டி : 

                        பண்ருட்டி பகுதியில் செங்கல் உற்பத்தி அதிகரிப்பால் செங்கல் விலை குறைந்து வருகிறது. பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம், கொக்குப்பாளையம், அங்குசெட்டிப் பாளையம், பணப்பாக்கம், சிறுவத்தூர், மணம்தவிழ்ந்தபுத்தூர், மந்திப் பாளையம், சேமக்கோட்டை, வரிஞ்சிப்பாக்கம், திருவதிகை, ஒறையூர், வீரப்பெருமாநல்லூர், கோட்லாம்பாக்கம் ஆகிய கிராமங்களில் தினசரி 20 லட்சம் செங்கல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப் பகுதியில் தயாரிக்கப்படும் செங்கல் தரமானதாக உள்ளதால் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கும் இங்கிருந்து தினந்தோறும் 20 லோடு லாரிகள் அனுப்பப்படுகிறது.

                  கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மாவட்டத்தில் சுனாமி குடியிருப்பு கட்டும் பணி அதிகளவில் நடந்ததால் செங்கல் விலை ஏற்றமாக இருந் தது. இதனால் சாதாரண விவசாயிகள் கூட சூளை வியாபாரத்தை ஆரம்பித் தனர்.அப்போது ஆயிரம் செங்கல் 3500 ரூபாய் வரை விலை போனது. ஆனால் கடந்த ஆண்டு சுனாமி குடியிருப்பு பணிகள் முடிவடைந்ததால் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கட்டை சூளை செங்கல் 2500 ரூபாயாகவும், மெலார் சூளை 2,200மாக வீழ்ச்சியடைந்தது. கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் விட்டு விட்டு தொடர் மழை பெய்ததால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதித்தது. இதனால் விறகு கட்டைகள் மூலம் சூளைபோடப்படும் செங்கல் ஆயிரம் 2800 ரூபாயும், சவுக்கு மெலார் சூளை 2400ம் விலை போனது. கடந்த ஒரு மாதமாக மழை அறவே நின்றதால் செங்கல் அறுக்கும் பணி தீவிரமடைந்து சூளைபோடும் பணிகள் அதிகளவில் நடந்து வருகிறது.

                     இதனால் கட்டை சூளை ஆயிரம் கல் 2500 ரூபாயாகவும், மெலார் சூளை கல் 2200மாக குறைந்தது. கடந்த ஆண்டு ஆயிரம் பச்சைக் கல் அறுப்பதற்கு கூலியாக 200ம், கல் அடுக்குவதற்கு 250ம் கூலி இருந்தது.ஆனால் வேலையாட்கள் பற்றாக்குறை காரணமாக கல் அறுப்பதற்கு 225 முதல் 250 ரூபாயும், கல் அடுக்க 275ரூபாயும், 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் இந்த மாதத்தில் செங்கல் விலை மேலும் குறையவாய்ப்பில்லை என சூளை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.இருப்பினும் செங்கல் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தால் ஏப்ரல் மாதத்தில் கட்டை சூளை செங்கல் 2200 ரூபாயும், மெலார் செங்கல் 2000மாக குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior