கடலூர்:
              கடலூரில் மீனவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பது, கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட சுனாமி வீடுகள் கட்டுமானத்தில் நடந்துள்ள முறைகேடுகளைச் சுட்டிக் காட்டியும் நடவடிக்கை எடுக்காதது,  சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் மீனவர்களின் வீடுகளைக் காலி செய்ய வற்புறுத்துவது, சுனாமி பாதித்த சில பகுதி மக்களுக்கு இன்னமும் வீடுகள் கட்டிக் கொடுக்காதது ஆகியவற்றைக் கண்டித்தும், மாவட்டம் முழுவதும் கட்டப்பட்ட வரும் சுனாமி வீடுகளின் தரத்தைக் ஆய்வுசெய்ய வேண்டும், கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
               மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு   மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆ.ஜெயராமன் தலைமை தாங்கினார்.மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கங்காதரன் வரவேற்றார். மீனவர் பாதுகாப்பு பேரியக்க மாநில பொதுச் செயலர் செல்வ.ஏழுமலை, குடிமக்கள் இயக்க பொறுப்பாளர்கள் தேவராஜ், ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வடக்கு மண்டல ஆலோசகர் பி.ஜே.அமலதாஸ்,  தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.நிஜாமுதீன், பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ், தமிழ்தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலர் திருமார்பன், நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசகர் கவிஞர் பால்கி, வழக்கறிஞர் கோ.மன்றவாணன், வெண்புறா பேரவைத் தலைவர் சி.குமார், தமிழர் கழக மாவட்ட அமைப்பாளர் கு.பரிதிவாணன் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்.சந்திரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக