உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பொது வேலை நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது வேலை நிறுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தம்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் வியாழக்கிழமை தெரிவித்தது. 

                இந்நிலையில் மது பானங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் போலீஸ் பாதுக்காப்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.  டீசல் விலையாக் குறைக்க வேண்டும், காப்பீட்டுக் கட்டண உயர்வைத் திருப்பித் தர வேண்டும், சாலைகளில் சுங்கக் கட்டணத்தை குறைக்க வேண்டும். மோட்டார் உதிரி பாகங்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளுக்காக தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் அறிவித்து உள்ளனர். 

                 கடலூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளும் என்று லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். 

                 பால், காய்கறி, முட்டை மற்றும் அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்லும் லாரிகளுக்கு, வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.  எனவே 80 சதவீத லாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பஙகேற்கும் என்று கூறப்படுகிறது.  லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருள்கள் வருகை மற்றும் உற்பத்திப் பொருள்களை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் லாரிகள், என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து பழுப்பு நிலக்கரி எடுத்துச் செல்லும் லாரிகள், பெண்ணாடத்தை அடுத்த ஆலத்தியூர் மற்றும் தளவாய் ஆகிய இடங்களில் உள்ள இரு சிமென்ட் ஆலைகளுக்கு, கடலூர் மாவட்டம் வழியாக தினமும் இயக்கப்படும் 500 லாரிகளும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.  

                இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் லாரிகளுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.  மது பாட்டில்களும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் தற்போது இடம்பெற்று விட்டதால், டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.





Read more »

வெள்ளி, பிப்ரவரி 11, 2011

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

கடலூர்:

 
            தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் தங்களது 3 நாள் வேலைநிறுத்தத்தை காலவரையற்ற வேலைநிறுத்தமாக வியாழக்கிழமை அறிவித்தனர்.  ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளுக்காக ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

            அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.  இந்த நிலையில் சங்கத்தினரை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாததைக் கண்டித்து தங்களது போராட்டத்தைக் காலவரையற்ற வேலைநிறுத்தமாக மாற்றி இருப்பதாக வியாழக்கிழமை அறிவித்தனர். இதனால் மக்களுக்கான ஊரக வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.  வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (ஊரக வளர்ச்சித் துறை) வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

              ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.துரை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆதவன் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட நிர்வாகிகள் சணமுக சிகாமணி, உதயகுமார், வீரபாண்டியன், தமிழ்மணி, பழநிசாமிநாதன், குமார், கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன், செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

செவ்வாய், நவம்பர் 23, 2010

கடலூரில் இன்று முழு அடைப்பு: பொதுமக்கள் அவதி

கடலூர்:

                பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நிறைவேற்றக் கோரி கடலூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

               40 கோடி ரூபாய் செலவில் கடந்த 4 ஆண்டுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், இதுவரை முடிவு பெறவில்லை. இந்த திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக பாதள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடலூர் நகரில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

                  முழு அடைப்பு போராட்டத்தால் தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை. பேருந்து நிலையம் உட்பட பெரும்பாலான இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் மட்டும் இயங்குகின்றன. தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ இயங்காததால் அரசு பேருந்துகளில் கூட்டம் நிரம்பியுள்ளன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முழு அடைப்பின்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

வேலை நிறு

Read more »

செவ்வாய், அக்டோபர் 19, 2010

என்.எல்.சி. போராட்டம்: தமிழக MPக்கள், MLAக்கள் குழுவினர் பிரதமரை சந்திக்க முடிவு

பா.ம.க. மாநில இணைப் பொதுச்செயலாளர் வேல்முருகன் எம்.எல்.ஏ.  கடலூரில் நேற்று அளித்த பேட்டி:


                         ’’என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்காக பல போராட்டங்கள் நடத்தியும் என்.எல்.சி. நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை. 

                 சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, தொழிலாளர் நலத்துறை வலியுறுத்தியும் நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.ஆகவே, அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி முடிவெடுத்து, நாளை  கடலூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தம் நடத்துகிறோம். அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை வியாபாரிகள், பொதுமக்கள், டிரைவர்கள் தாமாகவே முன்வந்து, 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் துயரத்தில் பங்கேற்று, போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

                 இந்த போராட்டம் எந்தவித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் அமைதி வழியில் நடைபெறும். பால் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகளுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தமாட்டோம். மருந்து கடைகள் திறந்து இருக்கும். மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தும் நிலைக்கு கொண்டு செல்லாமல், பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண என்.எல்.சி. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவில்லை என்றால் மேற்கு வங்காளம், நந்திகிராமத்தில் ஏற்பட்டது போன்ற பிரச்சினை ஏற்படும்.  உயிருக்கு ஆபத்து உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, முறையாக பயிற்சி இல்லாத கிராமப்புற இளைஞர்களை என்.எல்.சி. நிர்வாகம் பணியில் ஈடுபடுத்துகிறது. முறையான பயிற்சி பெறாததால் அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதற்கு மாசுகட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                       வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வோம், அடையாள அட்டையை பறிப்போம் என என்.எல்.சி நிறுவனம் மிரட்டுவது சட்டவிரோதமானது. தொழிற்சங்க தலைவர்களை காவல்துறையினர் மிரட்டுவதும் கண்டனத்துக்குரியது. தொழிலாளர்களின் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

                      பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், வருகிற 21-ந் தேதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிலக்கரித்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து மனு கொடுக்கிறோம். இதில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் செம்மலை, ஆனந்தன், தம்பித்துரை, அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த சின்னசாமி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி டி.கே.ரெங்கராஜன் தலைமையில் 3 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு குருதாஸ் குப்தா தலைமையில் 3 எம்.பி.க்களும், பா.ம.க. சார்பில் நானும் கலந்து கொள்கிறோம்’’என்று தெரிவித்தார்.

Read more »

சனி, ஜூலை 03, 2010

பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது நடவடிக்கை: கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை

கடலூர்: 

              பொது வேலை நிறுத்தத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு செய் வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண் டித்து பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரும் 5ம் தேதி பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரு மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நடந்தது. 

கடலூர்: 

கூட்டத்தில் கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில், 

                  "வரும் 5ம் தேதி அத்தியாவசிய பொருட்களான பால், குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படும். மத்திய, மாநில அரசு அலுவலங்கள், பஸ்கள், ரயில்கள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

விழுப்புரம்: 

கலெக்டர் பழனிசாமி பேசுகையில், 

                "தேவையின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள், கடைகளை மூட கட்டாயப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி நிறுவனங்கள் தடையின்றி இயங்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும். ஏதேனும் அசம் பாவிதங்கள் நடந்தால் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146 - 222656, காவல் துறை கட்டுப் பாட்டு அறை 04146 - 222172, 222174 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்' என்றார்.

Read more »

வெள்ளி, ஜூலை 02, 2010

பொது வேலைநிறுத்தம்; வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு


                       அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தத்தின் போது,   யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 5-ம் தேதி தேசிய  அளவிலான வேலைநிறுத்தத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகளும் ஈடுபட முடிவு செய்துள்ளன. பொது வேலைநிறுத்தத்தின் போது நிகழும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைகள் குறித்து விவாதிக்க உள்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

                 இந்தக் கூட்டத்தில் காவல் துறையினருக்கு பல்வேறு ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டன. பொது வேலைநிறுத்தத்தின் போது, மக்களின் அன்றாட வாழ்க்கை, போக்குவரத்து மற்றும் சட்டம், ஒழுங்கு ஆகியன பராமரிக்கப்பட வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், பொது மக்களுக்கோ மற்றும் பொதுச் சொத்துக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன.  அத்தியாவசியத் தேவைகளான தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு, குடிநீர் வழங்கல், பால் விநியோகம், செய்தித்தாள், மருத்துவமனைகள், தீயணைப்புத்துறை செயல்பாடுகள் தகுந்த பாதுகாப்புடன் பராமரிக்கப்பட வேண்டும்.  முக்கிய கட்டமைப்புகளான மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள், அரசுக் கட்டடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாலங்கள், எண்ணெய் கிடங்குகள், ரயில்வே மேம்பாலங்கள் ஆகியவற்றுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.  

               மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் தங்கு தடையின்றி செயல்படுவதற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், மக்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் தக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.   முக்கிய இடங்களை உள்ளடக்கி விரிவான போலீஸ் ரோந்துப் பணிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், பணிக்குச் செல்பவர்களை தடுப்பவர்கள், சட்ட விரோத மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.  ரயில் நிலையங்கள், பஸ் பணிமனைகள், நீதிமன்றங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு காவல் துறையினர் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Read more »

புதன், ஏப்ரல் 28, 2010

கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு: பஸ்கள் ஓடியது


கடலூர்: 

                  விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்கட்சிகள் அறிவித்த 'பந்த்'தையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

                    தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூ., கட்சிகள் 'பந்த்' அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று கடலூர் மாவட்டத்தில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பழக்கடைகள், பஸ்நிலைய கடைகள் திறந்திருந்தன. அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள்  செயல்பட்டன. அரசு பஸ்கள், ரயில்கள் ஓடின. ஒரு சில தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. தொலைதூர பஸ்கள் நீண்ட இடை வெளிக் குப்பிறகு இயக்கப்பட்டன.  எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மறியல்: 

                          கடலூர் மாவட்டத்தில் 12 இடங்களில் மறியலில் ஈடுபட்ட கம்யூ., கட்சியை சேர்ந்த 39 பெண்கள் உட்பட 393 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம்: 

                     திறந்திருந்த கடைகளை அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூ., கட்சியினர் ஊர்வலமாக சென்று மூடும்படி கூறினர். பின்னர் தி.மு.க., வினர் கூட்டமாக சென்று மூடிய கடைகளை திறக்கும்படி கூறினர். இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. மா.கம்யூ., மாநிலக் குழு உறுப்பினர் மூசா தலைமையில் நகர செயலாளர் நடராஜன், மாவட்டக்குழு ராமச்சந்திரன், ம.தி.மு.க., நகர செயலாளர் சீனிவாசன், தமிழ் தேசிய காங், லோகநாதன், லோக்ஜன சக்தி பன்னீர் உள்ளிட்டவர்கள் மேல வீதி கஞ்சித்தொட்டி அருகே மறியலில் ஈடுபட் டனர்.

விருத்தாசலம்: 

                           ஜங்ஷன் ரோடு, கடைவீதி, பாலக் கரை உள்ளிட்ட இடங்கள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. மதியம் 2 மணிக்கு கம்யூ., கட்சியின் வட்ட செயலாளர்கள் கந்தசாமி, கலியபெருமாள் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

சேத்தியாத்தோப்பு: 

                        பூ கடைகள், சில பழக் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் பயணிகள் கூட்டமின்றி வெறிச் சோடி காணப்பட்டது.

நெல்லிக்குப்பம்:  

                        அ.தி.மு.க., நகர செயலா ளர் சவுந்தர், சேகர், கவுன்சிலர் தனசேகரன், ம.தி. மு.க., நகர செயலாளர் ராமலிங்கம், கஜேந்திரன், மா.கம்யூ., நகர செயலாளர் சுப்ரமணியன், உதயகுமார் தலைமையில் மறியல் செய்தனர். இதனால் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

பண்ருட்டி:  

                        பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. புதுப்பேட் டையில் தனியார் பஸ்சை அ.தி.மு.க., வினர் வழிமறித்ததால்  பரபரப்பு ஏற் பட்டது. இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் சேகர், மா.கம்யூ., பேரூர் கழக செயலாளர் ரங்கநாதன், விவசாய சங்க தலைவர் தமிழரசன்  தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி: 

                        பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூ., வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

பரங்கிப்பேட்டை: 

                  மருந்துக்கடை, பால் கடை மற்றும் 'டாஸ்மாக்' உள்ளிட்ட கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூடியிருந்தன.

ஸ்ரீமுஷ்ணம்: 

               பூவராகசுவாமி கோவில் திருவிழா நடப்பதால் கடைகளை மூடச்சொல்லி யாரும் வற் புறுத்தவில்லை. இதனால் ஸ்ரீமுஷ்ணத்தில் அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 'பந்த்' முழு வெற்றி; வணிகர்களுக்கு நன்றி: எம்.சி.சம்பத்


கடலூர்: 

                    கடலூர் மாவட்டத்தில் 'பந்த்' முழு வெற்றியடைந்துள்ளது. வணிகர்கள் தங்கள் உணர்வுகளை பிரதிபலித்துள்ளனர் என எம்.சி.சம்பத் கூறினார்.

இது குறித்து அ.தி. மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் நேற்று  கூறியதாவது: 

                        அத்தியாவசிய பொருட் களின் விலை உயர்ந்து விட்டன. நடுத்தர, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. 6.5 கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் 4 கோடி மக்கள் குடும்பம் நடத்த அவதிப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் மின் தடையால் ஏராளமான தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் அரசு தொலைநோக்குப் பார்வையோடு ஆட்சி நடத்தவில்லை. விலைவாசி உயர்வு, மின்தடை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க.,  மற்றும் தோழமை கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. கடலூரில் கடைகள் முழு அளவில் அடைக்கப்பட்டிருந்தன. வெள்ளையன் அறிக்கை விட்டிருந்த போதிலும், வர்த்தக சங்கம் முழுமையாக கட்டுப்பட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். வியாபாரிகள் மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கடைகளை அடைத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.  அவர்களுக்கு எனது நன்றி. இது அ.தி.மு.க., வுக்கு கிடைத்த வெற்றியாகும்.

                     அமைச்சர் பொன்முடி  கல்லூரியில் வேலை பார்க்கும் போது 450 ரூபாய் சம்பளம் பெற்றதாகவும், ஆனால் தற்போது உதவி பேராசிரியர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது என்றால் அதற்கேற்ற விலைவாசி உயர்வு இருக்குமல்லவா என நியாயப்படுத்தி பேசியுள்ளார். அரசு துறைகளில் அதிகபட்சமாக 20 லட்சம் பேர் பணியாற்றலாம். அவர்களுக்கு மட்டுமா இந்த விலைவாசி உயர்வு. பாதிக்கப்படுவது நடுத்தர, ஏழை வர்க்கத்தைச் சேர்ந்த 4 கோடி மக்கள் அல்லவா? மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எம்.சி. சம்பத் கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

செவ்வாய், ஏப்ரல் 27, 2010

இன்று பொது வேலைநிறுத்தம்: பொதுமக்கள் ஆதரவு தருமாறு எதிர்க்கட்சிகள் வேண்டுகோள்

         அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

                  விலைவாசி உயர்வு பிரச்னையில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க, இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாடி ஜனதா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், அ.தி.மு.க. உள்பட 13 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த 12-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்றது.மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் மீதான வரிகள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் ஏப்ரல் 27-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதென அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

                  இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வார்டு பிளாக், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அக்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்த வேண்டும்; பொதுமக்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும். வணிகர்கள் கடைகளை அடைத்து ஆதரவு தர வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. 

                  இப்போராட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்துக்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு) அறிவித்துள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் புதிய பென்சன் திட்டத்தை கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர். சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் எழும்பூர் மற்றும் கிண்டி ரயில் நிலையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. எனினும் ரயில், சாலை போக்குவரத்து தடையின்றி இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. க

                  டைகள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று வணிகர் சங்கங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. மதுரை, திருவண்ணாமலைக்கு விலக்குசித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்துக்கும், கிரிவலம் செல்லும் பக்தர்களின் நலனை முன்னிட்டு திருவண்ணாமலை நகருக்கும் விலக்கு அளிக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூர் மாவட்டத்தில் பலத்த ​பாதுகாப்பு ஏற்பாடுகள்

கடலூர்:

              எதிர்க்கட்சிகள் இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ அறிவித்து இருக்கும் முழு அடைப்பை முன்னிட்டு,​​ பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக,​​ கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தெரிவித்தார். 

திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கூறியது:

               கடலூர் மாவட்டத்தில் 1,800 போலீஸôர் மற்றும் அதிகாரிகள் மற்ற பணிகளை அனைத்தையும் நிறுத்தி விட்டு,​​ பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.​ அரசு அலுவலகங்கள்,​​ பள்ளிகள்,​​ கல்லூரிகள்,​​ வணிகப் பகுதிகள்,​​ பஸ் நிலையங்கள்,​​ ரயில் நிலையங்கள் போன்றவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.​ ​வர்த்தக நிறுவனங்களை மூடுமாறு யாராவது கட்டாயப்படுத்தினால்,​​ அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்.​ வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகப்படுவோர் ​ திங்கள்கிழமை இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவார்கள்.​ செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்.​ கடுமையான சட்டங்களில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்.​ அவர்களைக் கைது செய்து வைப்பதற்காக,​​ திருமண மண்டபங்கள் தயாராக உள்ளன. 

                    போலீஸ் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.​ 156 போலீஸ் வாகனங்கள் ஆயுதம் தாங்கிய போலீஸôருடன் ரோந்துப் பணியில் ஈடுபடும்.​ சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.​ மக்கள் பயமின்றி தங்கள் பணிகளைச் செய்யலாம்.​ அனைத்து உள்ளூர் பஸ்கள் இயக்கமும் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு மேல் நிறுத்தப்படும்.​ செவ்வாய்க்கிழமை காலை முதல் பஸ்கள் அனைத்தும்,​​ போலீஸ் பாதுகாப்புடன் கான்வாயில் அனுப்பப்படும்.​ ஆயுதம் தாங்கிய போலீஸôர் பாதுகாப்புக்காகச் செல்வார்கள் என்றார் எஸ்.பி.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அரசு அலுவலகங்கள் இயங்கும்,​​ பஸ்கள் ஓடும்

 கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ வழக்கம்போல் பஸ்கள் ஓடும்.​ அரசு அலுவலகங்கள் இயங்கும்.​ மின்சாரம்,​​ பால் விநியோகம்,​​ மருத்துவமனைகள்,​​ குடிநீர் விநியோகம்,​​ உணவகங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.​ 

மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:​ 

                  கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில்,​​ அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.​ மாவட்டத்தில் 1,800 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.​ பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களான குடிநீர்,​​ மின்சாரம்,​​ பால்,​​ மருத்துவமனைகள்,​​ உணவகங்கள் ஆகியவை இயல்பாகச் செயல்பட காவல் துறை மூலம் பாதுகாப்பு அளிக்க,​​ அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு உள்ளன.​ பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

என்எல்சியில் பலத்த பாதுகாப்பு

நெய்வேலி:
         
                எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ள நாடு தழுவிய முழு அடைப்பை ஒட்டி நெய்வேலி என்எல்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக நெய்வேலி டி.எஸ்.பி.​ மணி தெரிவித்தார். விலைவாசி உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 27-ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.​ தமிழகத்தில் அதிமுக தலைமையில் கம்யூனிஸ்ட்,​​ மதிமுக,​​ பார்வார்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளன. இந்நிலையில் நெய்வேலியில் உள்ள சில தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு ​ தெரிவித்துள்ளன.​ எனவே எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க மாவட்ட எஸ்.பி.​ அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் நெய்வேலி டி.எஸ்.பி.​ மணி தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள் 15 எஸ்.ஐ.க்கள் உள்ளிட்ட 250 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே என்எல்சிக்கு வீடு நிலம் வழங்கிய கிராம மக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை என்எல்சி பயிற்சி வளாகத்தில் நடைபெறுகிறது.​ இச் சமயத்தில் இழப்பீட்டுத் தொகை பெற வரும் கிராம மக்கள் எவ்வித சிரமமின்றி,​​ வந்து செல்ல சிறப்பு போக்குவரத்து வசதிகளை என்எல்சி நிர்வாகம் செய்துள்ளது.

Read more »

பொது சொத்துக்கள் மீது சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ்


கடலூர் : 

           பொது சொத்துக்களை சேதம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் கூறினார்.

இதுகுறித்து அவர்  கூறியதாவது: 

                  விலைவாசி உயர்வை கண்டித்து நாளை (இன்று) நடைபெறும் முழு அடைப்பையொட்டி கடலூர் மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நமது மாவட்டத்தில் ரோந்து சுற்றி வருவதற்காக ஏற்கனவே 136 வாகனங்கள் உள்ளன. மேலும் 20 வாகனங்கள் போலீசார் ரோந்து வர பயன்படுத்தப்படும். முழு அடைப்பு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வியாபாரம், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். வியாபாரிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். மார்க்கெட், பஸ் நிலையம், ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பஸ்கள் வழக்கம்போல் ஓடும். தேவைப்பட்டால் பஸ்கள் 'கான்வேயில்' இயக்கப்படும். பஸ்கள் மீது கல்வீசி தாக்குவது மற்றும் பொது சொத்துக்கள் மீது சேதம் விளைவித்தால் அவர்கள் மீது பொது சொத்து சேதப்படுத்தியதாக (பி.பி.டி., ஆக்ட்) வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். முழு அடைப்புக்கு ஆதரவு கேட்டு வியாபாரிகளை துன்புறுத்தக்கூடாது. அவ்வாறு அடாவடி செய் யும் விஷமிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.


Read more »

திங்கள், ஏப்ரல் 26, 2010

பந்த்: பஸ், ரயில்கள் ஓடும் - அரசு




          தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 27), வழக்கம்போல் பஸ், ரயில்கள் ஓடும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

            பந்த் அன்று அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் பஸ் நிலையம் உள்பட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் தெரிவித்தார். விலைவாசி உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 27-ம் தேதி, நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் அதிமுக தலைமையில், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக் கட்சிகள் பொது வேலை நிறுத்தத்தை நடத்த உள்ளன. 
 
பஸ், ரயில்கள் ஓடும்: 
 
                  இந்த நிலையில் பந்த் தினத்தன்று தமிழகத்தில் வழக்கம்போல் பஸ்கள் அனைத்தும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சென்னையிலிருந்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களும், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னைக்குள் இயக்கப்படும் பஸ்களும் எந்தவித பாதிப்பும் இன்றி வழக்கம்போல் இயக்கப்படும் என்ற அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல் ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என்று அத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 
முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு: 
 
              பந்த் அன்று மாநகரில் முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார். கடைகள் திறந்திருக்கும்: இந்த பொது வேலை நிறுத்தத்தில் ஏராளமான வணிகர் சங்கங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழக அனைத்து வணிகர்கள் சங்கம், தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கம், தமிழக வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், பந்த்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. இதனால், சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடைகளும், வணிக நிறுவனங்களும் வழக்கம்போல் திறந்திருக்கும் எனத் தெரிகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior