கடலூர்:
எதிர்க்கட்சிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்து இருக்கும் முழு அடைப்பை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தெரிவித்தார்.
திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கூறியது:
கடலூர் மாவட்டத்தில் 1,800 போலீஸôர் மற்றும் அதிகாரிகள் மற்ற பணிகளை அனைத்தையும் நிறுத்தி விட்டு, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிகப் பகுதிகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. வர்த்தக நிறுவனங்களை மூடுமாறு யாராவது கட்டாயப்படுத்தினால், அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள். வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகப்படுவோர் திங்கள்கிழமை இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவார்கள். செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள். கடுமையான சட்டங்களில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும். அவர்களைக் கைது செய்து வைப்பதற்காக, திருமண மண்டபங்கள் தயாராக உள்ளன.
போலீஸ் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 156 போலீஸ் வாகனங்கள் ஆயுதம் தாங்கிய போலீஸôருடன் ரோந்துப் பணியில் ஈடுபடும். சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. மக்கள் பயமின்றி தங்கள் பணிகளைச் செய்யலாம். அனைத்து உள்ளூர் பஸ்கள் இயக்கமும் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு மேல் நிறுத்தப்படும். செவ்வாய்க்கிழமை காலை முதல் பஸ்கள் அனைத்தும், போலீஸ் பாதுகாப்புடன் கான்வாயில் அனுப்பப்படும். ஆயுதம் தாங்கிய போலீஸôர் பாதுகாப்புக்காகச் செல்வார்கள் என்றார் எஸ்.பி.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக