சிதம்பரம், நவ.24:
சிதம்பரம் நகரில் சமீபத்தில் பெய்த கனமழையில் 4 வீதிகளைத் தவிர அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. ஆனால் இதுநாள் வரை சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டப்பணி தொடங்கப்பட உள்ளதால் சாலைகள் போடப்படவில்லை எனக் காரணம் கூறும் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் அந்த சாலைகளை தற்காலிகமாகவாவது சரி செய்யாலாம். கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கடலூர் நகரச் சாலைகளை சீரமைக்க ஆய்வு மேற்கொண்டு குழு அமைத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதுபோல் சிதம்பரம் நகர சாலைகளை ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் தற்காலிகமாக சாலைகளில் உள்ள பள்ளங்களை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நகரமன்ற உறுப்பினர் ஏ.ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை:
சிதம்பரம்-அண்ணாமலைநகர் இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு 10 மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால் மேம்பாலத்திற்கு மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை. மேலும் மேல்பாலத்தின் இருபகுதிகளில் வேகத்தடுப்பு மற்றும் ரவுண்டானா அமைக்கப்படாததால் மேம்பாலம் வழியாக செல்லும் அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவியர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாக பார்வையிட்டு மேம்பாலத்தில் மின்விளக்கு வசதியும், விபத்துகளை தடுக்க மேம்பாலத்தின் தொடக்கப்பகுதி, முடிவுப்பகுதி ஆகிய இருபுறமும் வேகத்தடுப்பு மற்றும் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரி மணிவாசகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக