ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் டிசம்பரில் நடைபெற உள்ள முற்றுகைப் போராட்டத்தில் கடலூர் மாவட்ட மீனவர்கள் 10 ஆயிரம் பேர் பங்கேற்பர் என தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் கிளையினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டக் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மீனவர்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கும் வகையில் மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வநதுள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்தினால், மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மீனவர்கள் மாற்றுத் தொழில்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே மத்திய அரசு இச்சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டித்தும், ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் மறியல் போராட்டம் நடத்த அப்பேரவையின் தலைவர் அன்பழகனார் தலைமையில் தமிழ்நாடு மீனவர் பேரவை திட்டமிட்டு உள்ளது. இந்த மறியல் போராட்டத்தில் கடலூர் மாவட்ட மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களின் வாழ்வுரிமைப் பாதிக்கும் இச்சட்டத்துக்கு, தமிழக அரசியல் தலைவர்களும் திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பைத் தெரிவித்தமைக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் கே.சுப்புராயன், இளைஞர் பேரவைத் தலைவர் எஸ்.கஜேந்திரன், மாணவர் பேரவைத் தலைவர் கலையழகன், செயலர் முருகன், பொருளாளர் ரவிசங்கர், நகரத் தலைவர் பி.கோகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக