கடலூர், டிச. 14:
நெல்லிக்குப்பத்தில் நீக்கப்பட்ட பஸ் நிறுத்தத்தை மீண்டும் அனுமதிக்கக் கோரி, திங்கள்கிழமை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எங்கே அதிகமான மக்கள் கூடிநின்று கை காட்டுகிறார்களோ அவ்விடங்கள் எல்லாம் பஸ் டிரைவர்களுக்கு பஸ் நிறுத்தங்கள்தான்.
100-க்கும் மேற்பட்ட பயணிகள் நின்று கைகாட்டினாலும் பஸ்கள் நிற்காமல் செல்லும் நிலையை செயற்கையாக உருவாக்கி இருக்கிறது நெல்லிக்குப்பம் காவல்துறை. பஸ் நிறுத்தமும் இங்கு அரசியல் ஆக்கப்பட்டு விட்டதோ என்று ஐயத்தை உருவாக்கி உள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில், 60 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வந்த பஸ் நிறுத்தத்தை திடீரென அகற்றிவிட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பஸ் நிறுத்தத்தை அகற்றினால்தான் பஸ் நிலையத்துக்குள் பயணிகள் கூட்டம் வரும் என்ற நோக்கத்தில் இந்த ஏற்பாட்டை காவல்துறை மேற்கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
வழக்கமான முறையில் பஸ் நிறுத்தம் வேண்டும் என்று கோரி நெல்லிக்குப்பம் நகர மக்கள் கடந்த 2 மாதங்களாகப் பல்வேறு போராட்டங்களை நடத்திவிட்டனர். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை. எனவே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் திங்கள்கிழமை சாலைமறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தில் த.மு.மு.க.வினர் மட்டுமன்றி பொதுமக்களும் ஏராளமாகக் கலந்து கொண்டனர் ஊர்வலமாக வந்த அவர்களை போலீஸôர் தடுத்து நிறுத்தினர். எனினும் தங்கள் அனைவரையும் கைது செய்யுமாறு அவர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.÷அஞ் சல் நிலைய பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்ட அவர்களிடம், நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன், நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு, வட்டாட்சியர் பாபு மற்றும் போலீஸôர் பேச்சுவார்த்தை நடத்தினர். செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் அஞ்சல் நிலைய பஸ் நிறுத்தம் அனுமதிக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. உறுதி அளித்தபடி பஸ் நிறுத்தம் அனுமதிக்கப்படாவிட்டால் மீண்டும் 16-ம் தேதி முதல் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று அறிவித்து உள்ளனர். போராட்டத்துக்கு த.மு.மு.க. மாநில துணைச் செயலாளர் எஸ்.எம்.ஜின்னா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.ஷேக் தாவுத் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் அமீர்பாஷா, நகரத் தலைவர் அப்துல்ரகீம், துணைத் தலைவர் அப்துல் ரகுமான், போராட்டக்குழு தலைவர் சர்புதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக