விருத்தாசலம், டிச. 14:
விருத்தாசலம் அருகே சாலையில் வந்துகொண்டிருந்த அரசு பஸ்ஸில் திடீரென படிக்கட்டு உடைந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த 5 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதைக் கண்டித்தும், சாலையை சீரமைக்கக் கோரியும் அப் பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பண் ருட்டியிலிருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்ட அரசு பஸ் காட்டுக்கூடலூர் வழியாக விருத்தாசலத்துக்கு வந்து கொண்டிருந்தது. காலை 9 மணியளவில் சின்னக்கண்டியங்குப்பம் கிராமத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது பஸ்ஸின் பின்பக்க படிக்கட்டு திடீரென உடைந்து விழுந்தது.
இச் சம்பவத்தில் அந்த பஸ்ஸில் பயணித்த அதே கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி (17), சீத்தா (20),கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாலம் (60), ஐயப்பன் (32), சிங்காரவேல் (65) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அரசு பஸ்ஸின் அவலத்தைக் கண்டித்தும், சாலையை செப்பனிட வலியுறுத்தியும் அப் பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காட்டுக்கூடலூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவ லறிந்த வட்டாட்சியர் பூபதி, காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மாரியப்பன், உஸ்மான் ஆகியோர் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்; குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக